Published : 16 Aug 2022 06:08 AM
Last Updated : 16 Aug 2022 06:08 AM

மதுரையில் காந்தி அரையாடைக்கு மாறிய கட்டிடம்: இன்றைய தலைமுறையினரிடம் பிரபலப்படுத்த வேண்டும்

மதுரை மேலமாசி வீதியில், காந்தியின் ஆடை மாற்றம் நிகழ்ந்த அறை.

மதுரை: மகாத்மா காந்தி மதுரையில் தனது மேலாடையைக் கைவிட்டு, அரையாடைக்கு மாறிய நிகழ்வு, அவரது இந்திய சுதந்திரப் போராட்ட பயணத்தில் மிக முக்கியமான தருணமாக கருதப்படுகிறது. காந்தி அரையாடையுடன் தோன்றிய கட்டிடம், மதுரையில் இன்றும் பாது காக்கப்படுகிறது.

தமிழகத்திற்கு காந்தி 1896லிருந்து 1946 வரை 20 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதில் 5 முறை மதுரை வந்துள்ளார். அப்படி அவர் மதுரைக்கு 2வது முறையாக வந்தபோதுதான் 1921 செப்டம்பர் 22-ல் மதுரையில் காந்தி அரையாடைக்கு மாறினார்.

தமிழகத்திற்கு 8-வது முறையாக 1921 செப்டம்பர் 15-ம் தேதி சென்னை வந்த காந்தி, பின் அங்கிருந்து பரங்கிப்பேட்டை, கடலூர், கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையை செப்டம்பர் 21-ம் தேதி சென்றடைந்தார்.

மதுரை ரயில் நிலையத்தில் அவர் வந்து இறங்கியபோது அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மக்கள் அவரை பார்ப் பதற்காக காந்தியைக் காரில் அமரவைத்து மதுரை கல்லூரி மைதானத் திற்கு அழைத்துச் சென்றனர். வழியெல்லாம் மக்கள் வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர், அங்கு மக்கள் மத்தியில் பேசினார்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அன்று இரவு மதுரை மேலமாசி வீதியில் உள்ள ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் காந்தி தங்கினார். மறுநாள் நாள் 1921 செப்டம்பர் 22-ம் தேதி இந்த கட்டிடத்தில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான அரையாடைக்கு மாறும்நடவடிக்கையை காந்தி மேற்கொண்டார்.

சட்டையில்லாமல் அரையாடை அணிந்த காந்தி, காமராஜர் சாலையில் உள்ள காந்தி பொட்டலில் நடந்த கூட்டத்திற்கு முதல் முறையாக சென்று அங்கு மக்கள் மத்தியில் பேசினார். கோட் சூட் அணிந்த காந்தியை அரையாடையுடன் எளிய மனிதராக காந்தியை பார்த்த மக்கள் வியப்படைந்தனர்.

கட்டமைப்பு வசதிகள்

இப்படி காந்தி அரை ஆடைக்கு மாறிய வீடு, முதன் முதலில் அரையாடையுடன் தோன்றிய காந்தி பொட்டல் போன்ற இடங்கள் இன்னமும் மதுரை நகர மக்களால் நினைவு கூரப்படுகின்றன.

ஆனால், இந்த இடங்கள், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட மற்ற சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் நடந்த இடங்களை மத்திய, மாநில அரசுகள் சுற்றுலாப் பயணிகள் பார்த்து செல்வதற்கு பிரபலப்படுத்தப்படவில்லை. அதற்கான கட்டமைப்பு வசதிகளையும் அங்கு மேற்கொள்ளவில்லை.

காந்தி அரை ஆடைக்கு மாறியமதுரை மேலமாசி வீதியில் உள்ளகட்டிடம், தற்போது காதி கிராப்ட் கட் டுப்பாடில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் மாடி அறையில்தான் காந்தி தங்கியிருந்தார். அந்த அறையில்தான் அவர் அரை ஆடைக்கு மாறியுள்ளார். இந்த கட்டிடத்தின் கீழ் தளம், காதி கிராப்ட் கடை செயல்படுகிறது.

கடையின் உள்ளே ஒரே ஒரு ஆள் மட்டும் செல்லக்கூடிய வகையில் உள்ள மாடிவாசலில் இருந்து மேல் மாடிக்கு ஒத்தையடி வழிப்பாதை உள்ளது.

அறையின் நடுவில் ஒரு காந்தி சிலை, சுற்றிலும் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படங்கள் உள்ளன.

இந்த கட்டிடத்தை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்த கட்டி டத்தின் வரலாற்று முக்கியத்துவமும், இருக்கும் இடமும் மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், இன் றைய தலைமுறையினருக்கும் சென்றடையவில்லை.

அதனால், அவர்கள், இந்த இடத்தை பார்வையிட ஆர்வம் காட்டாததால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேல் மாடி கட்டிடத்தை பெரும்பாலும் காதி கிராப்ட் ஊழியர்கள் பூட்டி வைத்துள்ளனர்.

இந்த கட்டிடத்தை மதுரை காந்தி மியூசியம் போல் சுற்றுலப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக இன்றைய தலைமுறையினர் மத்தியில் பிரபலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x