Published : 05 Jul 2022 06:22 AM
Last Updated : 05 Jul 2022 06:22 AM

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பயிற்சி நூல் மாணவர்களை ஈர்ப்பதற்காக வண்ண ஒவியங்களாக ஜொலிக்கும் காட்சிப் படங்கள்

சென்னை

பள்ளிக்கூடங்களில் 1 முதல் 3-ம்வகுப்பு வரை பயிலும் 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கான "எண்ணும் எழுத்தும்" என்றபுதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து 1 முதல் 3-ம் வகுப்புவரை கற்பிக்கும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் வண்ணமயமான ஆசிரியர் - மாணவர் கையேடு புத்தக வடிவிலும், இணைய வழியிலும் பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.

இந்தக் கையேடு குழந்தைகளுக்கும் பிடிக்கும் விஷயங்களை தேடிப் பிடித்து வண்ணப்படங்களாகவும், கதை சொல்லும் காட்சிப் படங்களாகவும், வரையும் ஓவியங்களாகவும் என கற்றல் திறனை மேம்படுத்தும் காட்சிப் பதிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கையேட்டின் முதல் பக்கத்தில் தமிழக அரசின் முத்திரையும், "எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் லோகோவும் இடம்பெற்றுள்ளன. இதில், பாடி, ஆடி விளையாடலாம், ஆசையாகப் பேசலாம், செய்துகற்று மகிழலாம், அமுதாவும் ஆட்டுக்குட்டியும், ஆட்டுக்குட்டியைத் தேடி, ஆட்டுக்குட்டிக்கும் பசிக்கும், லப்டப்... லப்டப்..., பூப்பூவாப் பூத்திருக்கு, கொக்கு நிற்கும் குளக்கரை, பந்தைத் தேடிய குரங்கு, அணில் தின்ற கொய்யா, நானே முடிவெடுப்பேன் ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளன.

"செய்வேன், செய்யமாட்டேன்" தலைப்பில் குழந்தைகள் ஒற்றுமையாக விளையாடுவது, கோபத்தில் உதைப்பது, விளையாட்டில் பந்தைப்பிடுங்குவது, கையில் இருந்து பந்தை லாவகமாக எடுப்பது, ஊனமுற்ற மாணவனுடன் சக மாணவிகள் பந்து வீசி விளையாடுவது போன்றவை நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரித்து கற்றல் திறனைவளர்க்கும் வகையில் ஆசிரியர் - மாணவர் கையேடு வண்ணமயமாக உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x