Published : 04 Jul 2022 06:36 AM
Last Updated : 04 Jul 2022 06:36 AM

திகார் சிறை கைதிகளுக்கு கல்வி, திறன் பயிற்சி அளிக்க டெல்லி அரசு திட்டம்

புதுடெல்லி: திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு கல்வி மற்றும் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

திகார் சிறையில் உள்ள கைதிகளின் தண்டனைக் காலம் முடிந்தவுடன் சமூகத்தில் மீண்டும் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும் எதிர்கால நல்வாழ்வுக்கும் கைதிகளுக்குத் திறன் பயிற்சி மற்றும் கல்வி உதவி வழங்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி கல்வித்துறை உயர் அதிகாரிகள், ஆசிரியர்களுடன் டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: டெல்லி திகார் சிறையில் தற்போது 20 ஆயிரம் கைதிகள் உள்ளனர். சிறைக் கைதிகள் தண்டனைக் காலம் முடிந்து தங்கள் வாழ்க்கையை கவுரவத்துடன் நடத்தவும் சமூகத்தில் இணைந்து செயல்படவும் அவர்களுக்கு கல்வியும் வேலை வாய்ப்பும் அவசியம். அதற்காக திகார் சிறைக் கைதிகளுக்கு டெல்லி அரசு சார்பில் கல்வி உதவியும், திறன் பயிற்சியும் டெல்லி அரசு சார்பில் அளிக்கப்படும்.

கைதிகள் கல்வி கற்கவும் அவர்களின் திறன்கள் பற்றியும் அறிய டெல்லியின் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கைதிகளின் கல்விப் பின்னணி மற்றும் திறன்கள் பற்றி ஆய்வு செய்வார்கள். இதற்காக, கைதிகளுடன் ஆசிரியர்கள் பேசி அவர்களின் திறன்கள் பற்றி அறிந்து கொள்வார்கள்.

பின்னர், கைதிகளின் கல்விப் பின்னணி அவர்களின் திறனுக்கேற்ப புதிய திட்டங்கள் வடிவமைக்கப்படும். கைதிகளுடன் பொறுமையாகவும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உணர்வுபூர்வமாகவும் விடாமுயற்சியுடனும் பேசுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் சரியான மனநிலையை ஏற்படுத்தி அவர்கள் சிறந்த மற்றும் அர்த்தமுள்ள வாழ்வு வாழ உதவுவதற்கு கல்விதான் ஒரே வழி. கல்வி அமைப்பில் உள்ள இடைவெளிகளால் குற்றங்கள் நடக்கின்றன. அரசின் புதிய திட்டத்தால் கல்வி அமைப்பில் உள்ள இடைவெளியைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவும். கைதிகள் தண்டனைக் காலம் முடிந்த பின் திறமையும் தன்னம்பிக்கையும் மிக்கவர்களாக தொழில் செய்து வாழவும் இது வழிவகுக்கும்.

தில்லி அரசு ஏற்கனவே திகார் சிறையிலும், ரோகினி மற்றும் மண்டோலியில் உள்ள கூடுதல் வளாகங்களிலும் கல்வித் திட்டத்தை நடத்தி வருகிறது, அங்கு கல்வி இயக்குநரகத்தால் அரசு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வாரந்தோறும் வகுப்புகள் எடுக்கின்றனர். இப்போது,​இந்த ஆசிரியர்கள் ஆய்வுக்கு அரசாங்கத்திற்கு உதவுவார்கள்.

இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x