Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

சென்னை

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 224 தேர்வு மையங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னையில் 33 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்.

கரோனா பரவல் காரணமாக தேர்வு மையங்களில் தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டன.

மாணவர்கள் அனைவரும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நகைகள், கைக்கடிகாரம், காப்பு உள்ளிட்டவற்றை அணிந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் சற்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். “உயிரியல், வேதியியல் பாடப்பிரிவு கேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன.

இயற்பியல் பிரிவு வினாக்கள் மட்டும் பதிலளிக்க சற்று கடினமாக இருந்தன. நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு ரத்து, பாடத்திட்டம் குறைப்பு போன்ற காரணங்களால் நீட் தகுதித்தேர்வு வினாத்தாளில் ஒவ்வொரு பிரிவிலும் கூடுதல் வாய்ப்புகள் (Choice) வழங்கப்பட்டிருந்தன. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

முதல் முறை எழுதுபவர்களைவிட 2, 3-ம் தடவை தேர்வு எழுதுபவர்களுக்கு வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்திருக்கும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் சில தேர்வு மையங்களில் ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x