

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளுடன் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வரும் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுழற்சி முறையில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி களை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வரும் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தர விட்டுள்ளது. அதற்கான ஏற்பாடு கள் தற்போது நடந்து வருகிறது. பள்ளிகள் மூடியிருந்தாலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து அவர்களது அலுவலக பணிகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவித்துள்ளோம். தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப் பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
இதுவரை ஆன்லைனில் நடத்திய அலகு தேர்வின் விடைத் தாள்கள் திருத்தப்பட்டு, பள்ளிகள் திறந்ததும் அதை மாணவர்களிடம் வழங்கப்படும். பள்ளியை சுத்தம் செய்யும் பணிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தங்கள் பள்ளியில், தலைமை பண்புடன் செயல்படவும், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் மிகவும் முக்கியம் என கருதி, பள்ளி திறக்கும் நாள் முன்னரே பள்ளிகளின் சுற்றுப்புறங்கள், மைதானங்கள், வகுப்பறைகள் பள்ளியில் உள்ள மேஜை, நாற்காலிகள் நன்முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஒவ்வொரு பள்ளியிலும் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் சுவர்கள் சுத்தம் செய்யப்படுவதோடு வர்ணம் பூசுதல், மராமத்துப் பணிகள் போன்றவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சானிடைசர், ஸ்கேனர் மற்றும் முகக்கவசம் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளன.
பல மாதங்கள் கழித்து மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளனர். எனவே, மாணவர்களின் மன நிலையை அறிந்து அதற்கு ஏற்றார் போல வகுப்பில் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்த வேண்டும். இந்த கல்வியாண்டில் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு தேவையான பாடங்களை எடுக்கவும் ஆசிரியர் களுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன’’ என்றனர்.