

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவு வெளியான நிலையில் மாணவர் சேர்க்கை வரும் 21-ம் தேதி தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2021-22 நடப்பு கல்வி ஆண்டில் பி.டெக் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்தியாவின் 31 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசம், துபாய், குவைத், மஸ்கட், கத்தார், பஹரைன், சிங்கப்பூர், மொரீசியஸ் உட்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர்.
மாணவர் சேர்க்கை தொடர்பாக விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் கூறும்போது, ‘‘விஐடியின் நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். வரும் ஜூன் மாதம் 21-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 16-ம் தேதி வரை 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 21 மற்றும் 22 -ம் தேதிகளில் தரவரிசை 1 முதல் 20 ஆயிரம்வரையும், ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ம் தேதிகளில் தரவரிசை 20,001 முதல் 45 ஆயிரம் வரையும், ஜூலை 8 மற்றும் 9-ம் தேதிகளில் தரவரிசை 45,001 முதல் 70 ஆயிரம் வரையும், ஜூலை 15 மற்றும் 16-ம்தேதிகளில் தரவரிசை 70,001 முதல்ஒரு லட்சம் வரையில் இருப்பவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
தரவரிசை 1 முதல் ஒரு லட்சம் வரையிலான மாணவர்களுக்கு விஐடி வேலூர், சென்னை, ஆந்திரபிரதேசம் மற்றும் போபால் வளாகங்களில் இடம் கிடைக்கும். ஒரு லட்சத்துக்கும் மேலாக தரவரிசைப் பெற்ற மாணவர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டும்தான் இடம் கிடைக்கும்.
மாணவர் சேர்க்கை முடிவுகளை https://admissionresults.vit.ac.in/viteee என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், விஐடி இணையதளம் வழியாக ஆன்லைன் கவுன்சலிங்குக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜி.வி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறப்பு கல்வி உதவி, மத்தியகல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவிலான முதலிடம் பெற்றவர்களுக்கு விஐடியில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீத படிப்புகட்டண சலுகையும், தரவரிசையில் 1 முதல் 50 வரை இடம் பெற்றவர்களுக்கு 75 சதவீத படிப்பு கட்டண சலுகையும், தரவரிசையில் 51 முதல் 100 இடம் பெற்றவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும், தரவரிசை 101 முதல் 1,000 இடம் பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் வழங்கப்படும்.
அதேபோல், ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், மற்றும் மத்தியபிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு விஐடியில் 100% கல்வி கட்டண சலுகையும், இலவச விடுதி, உணவுவசதி, விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் சேர்க்கை அனுமதி வழங்கப்படும். விஐடியில் 3 ஆண்டு இளங்கலை பட்டப் படிப்புகள் மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைபட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் www.vit.ac.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்றார்.