Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

டிஎன்பிஎஸ்சி.யின் குருப்-1 முதல்நிலை தேர்வு நாளை நடக்கிறது: 66 காலியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவிஇயக்குநர், கூட்டுறவு சங்கங்களின்துணை பதிவாளர், வணிகவரி உதவிஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளில்66 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஏப்.5-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கரோனா காரணமாகஜன.3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி முதல்நிலைத்தேர்வு தமிழகம் முழுவதும் நாளை(ஞாயிறு) நடைபெறும்.

பொது அறிவு தாள் தேர்வு காலை10 மணி முதல் மதியம் 1 மணி வரைநடைபெறும். காலை 9.15 மணிக்குதேர்வுக் கூடத்துக்கு வந்துவிட வேண்டும் என்றும் ஓஎம்ஆர் விடைத்தாளில் விடையளிக்க கறுப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் விண்ணப்பதாரர்கள் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் ‘ஒரு காலியிடத்துக்கு 50 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் முதல்நிலைத் தேர்வில் இருந்து அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில், தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 66 ஆக இருப்பதால் 3,300பேர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

மொத்தம் 3 தாள்கள் உள்ளடக்கிய மெயின் தேர்வில் விரிவாக விடையளிக்க வேண்டும். அதில்வெற்றிபெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இறுதியாக, மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

குருப்-1 தேர்வில் வெற்றிபெற்றுநேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரியாகவும் அதேபோல், டிஎஸ்பி பணியில் சேருவோர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம். அதோடு அவர்களுக்கு தமிழ்நாடு கேடர் ஒதுக்கீடு செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x