Published : 06 Oct 2020 07:17 AM
Last Updated : 06 Oct 2020 07:17 AM

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகள் மீதான புகார்: குறித்து விசாரணை நடத்த குழு

சென்னை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும்பொறியியல் கல்லூரிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 அரசு இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்.8 முதல்4 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பொறியியல் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து புகார்களைப் பெறவும், அதன் அடிப்படையில் கல்லூரிகளில் ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் புதிய குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே, அந்த குழுவை நடப்பு ஆண்டுக்கும் நீட்டித்து உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்) அருள்அரசு தலைமையில் கோவை பொறியியல் கல்லூரி முதல்வர் தாமரை, அண்ணா பல்கலைக்கழக சிவில் துறை பேராசிரியர் செந்தில், மெக்கானிக்கல் துறை பேராசிரியர் இளையபெருமாள் உள்ளிட்ட 4 பேரைக் கொண்ட குழு நடப்பு ஆண்டிலும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் பெறப்பட்டால், அதுதொடர்பான புகார்களை இந்தக் குழுவிடம் மாணவர்களும், பெற்றோரும் தெரிவிக்கலாம். அதன்படி, சென்னைகிண்டியில் உள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு தபால் மூலமாகவோ அல்லது 044-22351018, 22352299 தொலைபேசி எண்கள் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கட்டணக் குழு தலைவர் அருள்அரசு கூறும்போது, “விடுதிக் கட்டணம், பேருந்துக் கட்டணம் உள்ளிட்டவை குறித்தும்மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தப் புகார்கள் தொடர்பாககட்டணக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்படும் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x