Last Updated : 18 Aug, 2020 04:32 PM

 

Published : 18 Aug 2020 04:32 PM
Last Updated : 18 Aug 2020 04:32 PM

200 இடங்களுக்கு 700 மாணவர்கள்: அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று முதல் மாணவர் சேர்க்கைகள் தொடங்கி இருக்கின்றன. இந்த முறை பல இடங்களில் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க இடம் கிடைக்காமல் பெற்றோர் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை முன்கூட்டியே தொடங்கி தங்களது மாணவர்களைத் தக்கவைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டன. இந்தச் சூழலில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்படி இருக்குமோ என தயங்கிக் கொண்டிருந்த நிலையில், ஆங்காங்கே இருந்து நல்ல செய்திகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளே, காரைக்குடியில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர 200 இருக்கைக்கு 700 மாணவர்கள் போட்டிபோட்ட அதிசயம் நடந்திருக்கிறது. இந்தப் போட்டியால், பெற்றோர் பலரும் தங்களது பிள்ளைகளுக்கு அந்தப் பள்ளியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.

இதேபோல் திருச்சி மாவட்டம் இடைமலைப்பட்டி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் மத்தியில் போட்டி ஏற்பட்டிருக்கிறது. மாணவர் சேர்க்கை ஆரம்பித்த முதல் நாளான நேற்று ஒரு நாளில் மட்டுமே 101 மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். இன்று காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 152 மாணவர்கள் இப்பள்ளியில் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள். இது திருச்சி மாவட்டத்தில் வேறெந்த பள்ளியிலும் இல்லாத அதிகபட்சச் சேர்க்கை எண்ணிக்கையாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்தப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2017-ல் 270 மாணவர்கள் இருந்த நிலையில் அது 2018-ல் 370 ஆக உயர்ந்தது. அதுவே கடந்த ஆண்டு 460 மாணவர்களாக உயர்ந்தது. இந்த ஆண்டு 60 மாணவர்கள் ஐந்தாம் வகுப்பை முடித்துப் பள்ளியை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். அதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்து மாணவர்கள் எண்ணிக்கையில் ஐநூறைக் கடக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் அது சாத்தியமாகியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயந்தி, “கரோனா சிக்கல்கள் இருப்பதால் இந்த ஆண்டு நாங்கள் மாணவர் சேர்க்கைக்காக பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், அப்படியிருந்தும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. அதற்கு கடந்த ஆண்டுகளில் எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையே காரணம்.

ஐந்தாம் வகுப்பு வரையே இருந்தாலும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் இங்கே செய்திருக்கிறோம். மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து அவற்றை வளர்க்கும் பயிற்சிகளை அளிக்கிறோம். இந்த பொதுமுடக்க காலத்தில்கூட மாநில அளவிலான ஸ்கவுட் போட்டியில் எங்கள் பள்ளி மாணவன் இரண்டாமிடம் பிடித்திருக்கிறான். இதுபோன்ற செயல்களால்தான் மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட்டுவிட்டு எங்கள் பள்ளியைத் தேடி வருகிறார்கள்” என்கிறார்.

கல்வியாண்டு தொடக்கத்தில் மாணவர் சேர்க்கை, புத்தகங்கள் வழங்குதல் என்று ஏகப்பட்ட வேலைகள் இருந்தாலும் இரண்டு நாட்களாக இடைமலைப்பட்டி புதூர் பள்ளிக்கு வந்திருந்து மாணவர்கள் சேர்க்கையைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம்.

அவரிடம் இதுகுறித்து பேசியபோது, “நான் இந்த ஒன்றியத்தில் பணியேற்ற பிறகு எந்தப் பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை குறையவிடவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு மாணவர்களாவது அதிகரித்திருப்பார்கள். இந்தப் பள்ளி ஆசிரியர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் வேலை செய்து மாணவர்களைப் பள்ளி நோக்கி ஈர்க்கிறார்கள். ஸ்கவுட், ரெட்கிராஸ் போன்று மேனிலை வகுப்புகளில் இருக்கக்கூடிய சேவைகளை இங்கே தொடங்கியிருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு என்னென்ன தேவையோ அதைத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ சேவை நிறுவனங்கள் மூலமாகவோ பெற்று மாணவர்களையும், பள்ளியையும் தன்னிறைவு பெறும் நிலைக்கு மாற்றியிருக்கிறார்கள். அதனால் மற்ற பள்ளிகளைவிட இங்கு சேர்க்கை அதிகமாக இருக்கிறது. திருச்சி மாவட்டத்திலேயே அதிக மாணவர்களைச் சேர்க்கும் ஆரம்பப்பள்ளி இதுதான். அதனால்தான் நானும் இங்குவந்து ஆசிரியர்களையும், மாணவர்களையும் உற்சாகப்படுத்துகிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x