Published : 10 Jun 2020 17:15 pm

Updated : 10 Jun 2020 17:28 pm

 

Published : 10 Jun 2020 05:15 PM
Last Updated : 10 Jun 2020 05:28 PM

10-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வே தேவையில்லை: காரணங்களை அடுக்குகிறார் பிரபா கல்விமணி

prabha-kalvimani-interview

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதை பலர் வரவேற்பதைப் போலவே இன்னொரு தரப்பினர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.

"தேர்வைத் தள்ளி வைத்தாவது நடத்தியிருக்கலாம். என் பிள்ளை டியூசன் எல்லாம் போய், ராப்பகலாகத் தூங்காமல் படித்திருந்தான். அவனை சென்டம் எடுக்க வைப்பதற்காக லட்சக்கணக்கில் செலவழித்திருக்கிறோம்" என்று சொல்கிறார்கள் அவர்கள். இதுகுறித்து கல்வியாளர் பிரபா கல்விமணி என்ன சொல்கிறார்? அவருடன் உரையாடியதிலிருந்து...

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பத்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வே தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் நாம் பருவத் தேர்வு முறையையே கடைபிடிக்கிறோம். அதாவது, முதல் பருவத்துக்கான தேர்வு முடிந்ததும், அந்தப் பாடங்களை ஒதுக்கிவிட்டு, இரண்டாம் பருவத்துக்கு வேறு பாடங்களையும், மூன்றாம் பருவத்துக்கு வேறு பாடங்களையும் நடத்துகிறோம். 'மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது, படிப்புச் சுமையைக் குறைக்க வேண்டும் என்றால் அவ்வப்போது நடத்தப்படுகிற பாடங்களை உடனுக்குடன் தேர்வு வைத்து முடித்துவிட வேண்டும்' என்றுதான் அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கிறோம்.

அப்படியிருக்கிறபோது, 10-ம் வகுப்பில் மட்டும் ஏன் எல்லா மண்ணையும் அள்ளி அவன் தலையில் மொத்தமாகக் கொட்ட வேண்டும்? பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு அரசும், பெற்றோர்களும் அதீத முக்கியத்துவம் கொடுத்து, அந்தப் பிள்ளைகளை கடும் நெருக்கடிக்கு ஆளாக்குகிறோம். எனவேதான், 10-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வே தேவையில்லை என்று சொல்கிறேன்.

மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதம், வருகைப்பதிவைப் பொறுத்து 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது அறிவியல் பூர்வமான முறைதானா?
வெறுமனே எழுத்துத்தேர்வு, பொதுத்தேர்வு நடத்துவதைவிட ஒவ்வொரு மாணவனையும் நுட்பமாக கவனித்து, அவனது மற்ற திறன்களையும் உள்ளடக்கி மதிப்பெண் அளிக்கிற தொடர் மதிப்பீட்டு முறையே (Continuous and comprehensive Evaluation) சிறந்தது என்பதே உலகலாவிய கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்போது மட்டும் என்ன அறிவியல் பூர்வமாகவா தேர்வுகள் நடைபெறுகின்றன? கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக எஸ்எஸ்எல்சி தேர்வில் 90 முதல் 96 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைகிறார்கள். எஞ்சிய 4 சதவீதம் பேர் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களையும் பாஸாக்கிவிட்டுவிட வேண்டியதுதானே? என்று எங்களைப் போன்றோர் கேட்பதுண்டு.

எனவே, தேர்வு ரத்து செய்யப்பட்டதையும், அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததையும் வரவேற்கிறேன். இது இந்த ஆண்டுக்கான முடிவாக மட்டுமின்றி, இனிவரும் எல்லா ஆண்டுகளுமே 10-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தக்கூடாது. எப்படி கல்லூரிகளில் அனைத்து செமஸ்டர் மதிப்பெண்களின் சராசரியே டிகிரி மதிப்பெண்ணாக கருதப்படுகிறதோ, அதைப்போலவே 10-ம் வகுப்புக்கும் மூன்று பருவ மதிப்பெண்களின் சராசரியையும் சேர்த்து மதிப்பெண் அளிக்க வேண்டும். 11, 12-ம் வகுப்பிலும்கூட அந்த நடைமுறையை கொண்டுவந்துவிடலாம் என்பதே என் கருத்து.

உயர் கல்விக்கு இப்போது நீட் உள்ளிட்ட பல போட்டித் தேர்வுகள் வந்துவிட்டன. இந்நேரத்தில் பொதுத்தேர்வே வேண்டாம் என்றால், தமிழகத்தின் கல்வித் தரம் இன்னும் கீழே போய்விடாதா?

மேல்நிலைக்கல்வி என்பது ஒரு படிப்பு. அதை மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு என்று பிரித்திருப்பது கல்லூரிகளில் செமஸ்டரைப் பிரித்திருப்பதைப் போலத்தான். ஆனால், அதை நமது பள்ளிக்கல்வித்துறை அறிவியல்பூர்வமற்ற முறையில் கையாண்டு, இரண்டாமாண்டு (பிளஸ் 2) தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே கணக்கில் எடுக்க ஆரம்பித்தது தான் பிரச்சினை. இதனால் தனியார் பள்ளிகளில், குறிப்பாக நாமக்கல் கோழிப் பண்ணைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடங்களை நடத்துவதே இல்லை.

ஆனால், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டு பாடங்களில் இருந்தும் கேள்விகள் வருகின்றன. அதனால்தான் நம்முடைய மாணவர்கள் திணறுகிறார்கள். இதை உணர்ந்துதான் பள்ளிக்கல்வித்துறை செயலராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் இருந்தபோது, பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டு வகுப்புகளுக்குமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு ஆணையிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் பொதுத்தேர்வு இருந்தாலும், 12-ம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தால் அரசு அறிவித்தது கேலிக்கூத்தாகிவிட்டது. மீண்டும் இவ்விரு வகுப்பு மதிப்பெண்ணும் முக்கியம், இரண்டாண்டு படிப்பும் முக்கியம் என்ற நிலையைக் கொண்டுவருவதே மாணவர்களுக்கு நல்லது என்றார் பிரபா கல்விமணி.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Prabha kalvimaniInterview10-ம் வகுப்புபொதுத்தேர்வுபிரபா கல்விமணிபத்தாம் வகுப்புமாணவர்கள்கற்றல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author