Last Updated : 20 May, 2020 04:22 PM

 

Published : 20 May 2020 04:22 PM
Last Updated : 20 May 2020 04:22 PM

கரோனா காலத்திலும் கல்வி, பேருந்துக் கட்டணம் கேட்டு பெற்றோரை நிர்பந்திக்கும் புதுச்சேரி தனியார் பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுவை மாநிலத்தில் கல்விக் கட்டணம் கேட்டு பெற்றோர்களை நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலிறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் சார்பில் இன்று வெளியிடப் பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
’‘நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மற்றும் 55 நாட்களாகத் தொடரும் பொதுமுடக்கத்தால் அனைத்துத் தரப்பட்ட மக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர். குறிப்பாக, கிராமப்புறத்து மக்கள் வேலை இழந்து, வருமானம் இழந்து, பொருளாதார ரீதியாகப் பாதிப்படைந்துள்ளனர்.

இதனை அறிந்து புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கடந்த வாரம் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 3 மாத காலத்திற்கு கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால், இதைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல் ஒரு சில தனியார் பள்ளிகள் நான்காம் பருவ கல்விக் கட்டணத்தைக் கேட்டு பெற்றோர்களை நிர்பந்திப்பது தெரிய வருகிறது. மேலும், கடந்த மூன்று மாதங்களாக இயக்கப்படாத போதும் பள்ளிப் பேருந்துக் கட்டணத்தையும் கட்டச்சொல்லி பெற்றோர்களை கட்டாயப்படுத்துவது தெரிய வருகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

கடந்த 2017-ம் ஆண்டு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையில் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை வசூலிக்காமல் அதைவிடக் கூடுதலாகவே வசூலித்து வந்தனர். மக்களும் மறுப்பு தெரிவிக்காமல் அதைச் செலுத்தி வந்தனர்.

ஆனால், தற்போதைய அசாதாரண சூழலில் தங்கள் வருமானம், வாழ்வாதாரம் இழந்து நெருக்கடியில் உள்ள மக்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. ஆகவே, புதுச்சேரி கல்வித்துறை உடனடியாக கல்விக் கட்டணம் கட்டச்சொல்லி நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரிப் பிரதேசக் குழு கேட்டுக் கொள்கிறது.

மேலும், கல்வி கட்டணம் கட்டச்சொல்லி நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளிக்கும் வகையில் புதுச்சேரி கல்வித் துறை சார்பில் ஹெல்ப் லைன் எண்களை (உதவி மையம்) வெளியிட வேண்டும்.’’
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x