

கரோனா முடிவுக்கு வராத நிலையில் நீட் தேர்வை அறிவித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாளுக்கு நாள் கரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பேரிடர் காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையானதாகும்.
உயிரா படிப்பா என்றால் உயிரே முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆனால் ஒத்திவைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் வயிற்றுப் பசியாறுவதற்கே திண்டாடும் நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் எப்படி ஆயத்தமாக முடியும்? நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பதிவு செய்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதில் 20,000 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்.
மின்னல் வேகத்தில் கரோனா பரவி நாடு முழுவதும் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட சூழலில் தமிழ்தாட்டில் 3,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா எப்போது முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்கு உடலும் மனதும் ஒருநிலையில் இல்லை.
இந்நிலையில் நீட் தேர்வு அறிவிப்பால் மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும் மன உளைச்சலிலும் உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் படிப்பதற்குப் போதிய வசதியின்றி தவிப்பதாலும் இணையதள வசதி சரிவர இல்லாததாலும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். தேர்வு நடந்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சத்தில் பெற்றோர்களும் உள்ளனர்.
எனவே பேரிடர் காலம் என்பதால் நீட் தேர்வினை ரத்து செய்து பழைய முறையான பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்த ஆவன செய்யவேண்டும்.
இல்லையேல் கரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு மாநில அரசே ஒரு நுழைவுத்தேர்வு வைத்து தேர்வுசெய்து இடமளிக்கலாம். எனவே, பெற்றோர்கள், மாணவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நீட் தேர்வினை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசினை வலியுறுத்தும்படி தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.