Published : 17 Feb 2020 07:58 AM
Last Updated : 17 Feb 2020 07:58 AM

ஒரு மணி நேர தலைமை ஆசிரியர் பணி: ஆய்வு செய்து அசத்திய மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு

திருச்சியில் தலைமையாசிரியராக பதவி வகிக்க தனக்கு கிடைத்த ஒரு மணி நேர வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திய மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருச்சி ரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியில் அமைந்துள்ளது கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் நல்லோர் வட்டம் மற்றும் புது சுவாசம் ஆகிய அமைப்புகள் சார்பில் சிறந்த மாணவர்களுக்கு ‘மாணிக்க மாணவர் விருது' வழங்கும் வகையில், மாணவ, மாணவிகளிடம் உள்ள பல்வகை திறன்களை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் வி.சைவராஜூ, நல்லோர் வட்டத்தின் திருச்சி தலைமைஒருங்கிணைப்பாளர் மனோகரன், புது சுவாசம் அமைப்பின் நிறுவனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நல்லோர் வட்டம் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாணவ- மாணவிகளிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பி,தனித் திறன்களை சோதித்தறிந்தார். கேள்விகளுக்கு தைரியமாக பதில்அளித்தல், கல்வி மற்றும் பொது அறிவு,நாட்டு நடப்பு, அரசியல், அறிவியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் உட்படபல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட 15 பேரில், இறுதியாக 7-ம் வகுப்பு மாணவிகள் த.செல்வசங்கீதா,எஸ்.லோகேஸ்வரி, 6-ம் வகுப்பு மாணவர் தே.விமல்ராஜ் ஆகியோர் ‘மாணிக்க மாணவர் விருதுக்கு' தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, தலைமை பண்பை வளர்க்கும் நோக்கில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் 3 பேரில் ஒருவருக்கு ஒரு மணி நேரம் தலைமையாசிரியராக பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஒரு மணி நேர தலைமை ஆசிரியராக செல்வசங்கீதா தேர்வு செய்யப்பட்டார்.

பதவி ஏற்றுக் கொண்ட செல்வசங்கீதா உடனடியாக பள்ளியில் உள்ளசத்துணவு மையத்துக்குச் சென்று மாணவ, மாணவிகளுக்கு வழங்கவிருந்த மதிய உணவை சாப்பிட்டுப் பார்த்ததுடன், சமையல் சுகாதாரமான முறையில் செய்யப்படுகிறதா என்பதைஆய்வு செய்து, சமையலரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகளை பார்வையிட்டதுடன், உணவு இடைவேளை முடிந்து ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வகுப்புகளுக்குச் செல்கின்றனரா என்று ஆய்வு செய்தார்.

பின்னர், மாணவ, மாணவிகளிடம் செல்வசங்கீதா பேசும்போது, “கல்விதான் நம் வாழ்வில் முக்கியமானது. எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கல்வியுடன் தனித் திறன்களையும் வளர்த்துக் கொண்டால்தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்” என்றார்.

தலைமை ஆசிரியராக தனக்கு கிடைத்த ஒரு மணி நேர வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டசெல்வசங்கீதாவை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், நல்லோர் வட்டம், புது சுவாசம் அமைப்பினர், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சைவராஜூ கூறும்போது, “கல்வியுடன், தனித் திறன்களையும், தலைமைப் பண்பையும் வளர்த்துக் கொள்வது அவசியம் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்மூலம் தயக்கத்துடன் உள்ள பிற மாணவ- மாணவிகளும் தன்னம்பிக்கையுடன் வெளியே வருவார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x