Published : 12 Feb 2020 08:45 AM
Last Updated : 12 Feb 2020 08:45 AM

வாங்கப்பாளையம் அரசுப் பள்ளியில் சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினம்

கரூர்

கரூர் அருகேயுள்ள வாங்கப்பாளையம் அரசுப் பள்ளியில் சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் கரூர் வனத்துறை இணைந்து நடத்திய சர்வதேச சதுப்பு நில பாதுகாப்பு தினம் தலைமைஆசிரியை கு.கார்த்திகா தலைமையில் கரூர் அருகேயுள்ள வாங்கப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

கரூர் வனச்சரக அலுவலர் பி.நடராஜன், கரூர் மாவட்டத்தில் வனத்துறை மேற்கொண்டுள்ள மர வளர்ப்பு திட்டங்கள் மற்றும் ஈர(சதுப்பு) நில பாதுகாப்பு பற்றி பேசினார். கரூர் இளைய தலைமுறை பசுமை காப்பாளர் ஆனந்தராஜ் ஈர நில பஞ்சப்பட்டி ஏரியில் மேற்கொண்ட பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செ.ஜெரால்டு, பிச்சாவரம் சதுப்புநில காடுகளை பாதுகாக்கும் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். சிறப்பாக பணி செய்த மாணவர்களுக்கு பசுமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வாக மரம் நடுவது, குப்பையைத் தரம் பிரித்து மக்க வைப்பது, பிறந்த நாளுக்கு மரக்கன்று நடுவேன் என மாணவ, மாணவிகள் பேசினர்.

பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பு ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சமூக அறிவியல் ஆசிரியர் கிரிராஜன் நன்றி கூறினார். 9-ம் வகுப்புமாணவர் மாதேஸ்வரன் சிறப்பாக தெளிவாக, சரியாக பசுமை நிகழ்வை தொகுத்து வழங்கி அனைவரின் பாராட்டையும், பொன்னாடையும் பெற்றார். வனவர்கள் பாஸ்கர், ரமேஷ், ஈஸ்வரி, ஆசிரியர்கள், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x