Published : 31 Jan 2020 09:33 AM
Last Updated : 31 Jan 2020 09:33 AM

5, 8-ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்வை கற்றல் திறன் குறைபாடுடைய குழந்தைகள் எதிர்கொள்வது கடினம்- மன அழுத்தம் ஏற்படும் எனக் கூறி ஆசிரியர்கள் எதிர்ப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஆயிரக்கணக்கான கற்றல்திறன் குறைபாடுடைய குழந்தைகளும், செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளும் எதிர்கொள்ள உள்ளனர். சராசரி குழந்தைகளே இந்தத் தேர்வுக்கு அஞ்சும் சூழலில், இவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வர் என்பது ஆசிரியர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே உள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசால்இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகள் இந்த பொதுத் தேர்வு வரையறைக்குள் வருகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த தேர்வு வரம்புக்குள் வராது. ஆனால், இந்த தேர்வு வரம்புக்குள் கற்றல் திறன் குறையுடைய குழந்தைகளும், செவித்திறன் குறையுடைய குழந்தைகளும் வருகின்றனர் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறையுடையோர் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஏராளமான செவித்திறன் குறையுடைய குழந்தைகள், கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் பயில்கின்றனர். உதவித் தொகை கிடைப்பதால் இவர்களில் பெரும்பாலோர் அரசுப் பள்ளியிலேயே பயில்கின்றனர்.

5, 8-ம் வகுப்பு தேர்வுக்கு எவ்வளவு குழந்தைகள் உள்ளனர் என்ற பட்டியலில், கற்றல் குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கையும் சேர்த்தே பள்ளி தலைமை ஆசிரியர்களால் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் எவ்வாறு பொதுத் தேர்வை எதிர்கொள்வர் என்பது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்களை கேட்டபோது, “இப்போதுதான் பட்டியல் தயாராகிறது. கற்றல் திறன் குறைபாடுடைய குழந்தைகள் கூறுவதை வேறு நபர் மூலம் எழுதும் வகையில் தனியாக ஆட்களை நியமிப்போம்” என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாவட்டச் செயலர் சேகர்கூறும்போது, “3 ஆண்டுகளுக்கு தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று அரசு தரப்பில் கூறுகின்றனர். அதன் பின்னர்நிலை என்ன என்பது கேள்வியாக உள்ளது. 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைப்பதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அவர்களுக்கு சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும். எந்தக் குழந்தைக்கும் இந்தத் தேர்வு தேவை இல்லை என்பதை நாங்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இந்தத் தேர்வை புறக்கணிப்பது குறித்தும் ஆசிரியர் சங்கங்கள் பேசி வருகின்றோம். இதில் கற்றல் திறன் குறைபாடுடைய குழந்தைகள் நிலை மிகவும் கவலைக்குரியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x