Published : 29 Jan 2020 07:20 AM
Last Updated : 29 Jan 2020 07:20 AM

‘அறிவுத் திருவிழா விநாடி - வினா' பரிசளிப்பு விழா: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்- காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

பிரச்சினைகளை கண்டு அஞ்சி ஒதுங்காமல் அவற்றை எதிர்கொள்ளும் தைரியம் மாணவியருக்கு அதிகம் தேவை என்று காஞ்சிபுரம் எஸ்பி சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் இணைந்து நடத்திய ‘அறிவுத் திருவிழா விநாடி - வினா' நிகழ்ச்சி, காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 9 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவியர் 162 அணிகளாக, மொத்தம் 324 பேர் பங்கேற்றனர்.

இதில் அரக்கோணம் பரம்பரா அகாடமி மாணவர்கள் பி.ஹேமந்த், பி.திரிஷா முதலிடம் பிடித்தனர். காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர் ஆர்.காவியா, எஸ்.தேவிகா 2-ம் இடமும், செய்யாறு விருட்சம் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் ஏ.கோபிநாத், டி.வி.பிரின்ஸி இன்ஃபேன்டியா 3-ம் இடமும் பிடித்தனர்.

காஞ்சிபுரம் ஜீனஸ் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி மாணவியர் எஸ்.சவிதா, வி.லத்திகா 4-ம் இடமும், செய்யாறு விஸ்டம் வித்யாஸ்ரம் பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள் வி.வசந்தராஜா, பி.பிரவீன் கார்த்திக் 5-ம் இடமும், காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி மாணவியர் டி.கலைச்செல்வி, கே.எஸ்.ஜீவிதா 6-ம் இடமும் பிடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். அவர் கூறியதாவது:

2020-ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியிருந்தார். ஆனால் இந்த ஆண்டு பிறந்து 28 நாட்கள் சென்றுவிட்டன. நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.

தமிழக இளைஞர்கள் பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் நேர்முகத் தேர்வுகளில்தான் தோல்வியுறுகின்றனர். அதற்கான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வில் கேட்கும் கேள்விகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

தற்போது போட்டித் தேர்வுகளுக்கும் அதிகம் பேர் விண்ணப்பிக்கின்றனர். உதாரணமாக, காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு 1,000 காலி இடங்கள் இருந்தால், 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் இருந்துதான் 1,000 பேரை தேர்வு செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒதுங்காமல் அவற்றை எதிர்கொள்ளும் தைரியம் மாணவியருக்கு அதிகம் தேவை. இந்த தைரியத்தை பெற்றோர்கள் கூடுதலாக சொல்லிக் கொடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் மாணவியர் தங்கள் படங்களை போடக்கூடாது. செல்போனை அறிவுத் தேடலுக்கும், தேவைக்கும் மட்டும் பயன்படுத்தினால் முன்னேறலாம். அதை பொழுதுபோக்குக்காக அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் அருண்குமார், முதல்வர் சிவப்பிரகாசம், விநாடி-வினா மாஸ்டர்கள் அரவிந்த், ஸ்ரவண், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு உதவி மேலாளர் ஆர்.அமுதன், மாணவர் சேர்க்கை பிரிவு அலுவலர் பிரசாந்த் சசிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x