Published : 28 Jan 2020 09:01 AM
Last Updated : 28 Jan 2020 09:01 AM

தூங்கா நகரமாகிறது இந்தியாவின் மான்செஸ்டர் மும்பை: மகாராஷ்டிரா சுற்றுலாத் துறையின் புதிய திட்டம் அமல்

கோப்புப்படம்

மும்பை

பகல் நேரங்களை போல இரவிலும் வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்றவை இயக்க தேவையான ‘ மும்பை 24 மணி நேரம்’ என்ற புதிய திட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மான்செஸ்டர் என்று மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அழைக்கப்படுகிறது. பல்வேறு வகையான தொழிற்சாலைகள் மும்பையில்இயங்கி வருகின்றன. இதனால், தொழில் சம்பந்தமாகவும், சுற்றுலாக் காகவும் மும்பைக்கு அதிக மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், மும்பை நகரத்தில் இரவு 11 மணிக்கு பிறகு கடைகள், வணிக வளாகங்கள் இயக்க தடைவுள்ளது.

இந்நிலையில், மும்பையை 24 மணிநேரமும் இயக்க தேவையான ‘மும்பை24 மணி நேரம்’ என்ற புதிய திட்டத்துக்கு அமைச்சரவை சமீபத்தில் அனுமதி அளித்தது. இதனையடுத்து, குடியிருப்பு அருகில் இல்லாத கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் ஆகியவை 24 மணி நேரமும் இயங்கும் திட்டம் ஞாயிற்றுக் கிழமை முதல் அமலுக்கு வந்தது. ஆனாலும், நகரின் முக்கியவணிக வளாகங்கள் இரவு நேரங்களில் அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்ரே கூறியதாவது:

இரவு நேரத்தில் கடைகள், வணிகவளாகங்களை திறப்பது அவர்களின் சொந்த விருப்பமாகும். இது கட்டாயமில்லை. மும்பை 24 மணி நேரம்திட்டம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெரும். இனி இரவில் தாமதமாகவெளியே வருவதும் பாதுகாப்பானது தான் என்பதை மக்கள் உணர்வார்கள். இரவு கடைகள் பாதுகாப்புடன் இயங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் கீழ் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்பை நகரம் அனைவருக்கும் பாதுகாப்பானது. அது நிச்சயமாக தொடரும். இந்ததிட்டத்தினால் இரவு நேர பணியாளர்கள் மற்றும் போக்குவரத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு தாமதமானாலும் தாங்கள் விரும்பிய உணவை சாப்பிட முடியும். இந்த திட்டத்தின் கீழ் தற்போது மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் விலக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆதித்யா தெரிவித்தார்.

சென்னையில் இரவு நேரங்களில் வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகளை இயக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x