Last Updated : 22 Jan, 2020 07:08 AM

 

Published : 22 Jan 2020 07:08 AM
Last Updated : 22 Jan 2020 07:08 AM

முழு மதிப்பெண்ணுக்கு வழி செய்யும் மாதிரித் தேர்வுகள்: பிளஸ் 2 கணினி அறிவியல் / கணினி பயன்பாடுகள் / கணினி தொழில்நுட்பம்

மேல்நிலை வகுப்புக்கான புதிய பாடத்திட்டத்தில் கணினி பாடங்களில், கணினி அறிவியலுடன் மேலும் 2 பாடங்கள் அறிமுகமாகி உள்ளன. கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், கணினி தொழில்நுட்பம் ஆகிய அந்த 3 பாடங்களுக்குமான ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

வினாத்தாள் வடிவமைப்பு

வினாத்தாள் அமைப்பில் 3 பாடங்களும் ஒன்றாக உள்ளன. 70 மதிப்பெண்களுக்கான வினாத்தாள், 4 பிரிவுகளாக அமைந்துள்ளது. ஒரு மதிப்பெண் பகுதி,சரியான விடையை தேர்ந்தெடுப்பதான 15 வினாக்களுடன் இடம்பெறுகிறது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் தலா 9-லிருந்து தலா 6-க்கு விடையளிப்பதாகவும், அவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகவும் அமைந்துள்ளது. 5 மதிப்பெண்களுக்கான பகுதி, ‘அல்லது’ வகையிலான 5 வினாக்களை கொண்டுள்ளது.

உயர் சிந்தனை வினாக்கள்

1, 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களில் பெரும்பாலானவை பாடங்களின் பின்னுள்ள வினாக்களில் இருந்தே இடம்பெறும்.என்றாலும், அவற்றில் சில உயர்சிந்தனைக்கான வினாக்களாகவும், பாடங்களின் உள்ளிருந்தும் கேட்கப்படுகின்றன. எனவே முழுமதிப்பெண் பெற, உயர் சிந்தனைக்கான வினாக்கள், மறைமுகமற்றும் உள் வினாக்களுக்கும் முக்கியத்துவம் தந்து தயாராக வேண்டும். 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களில், ‘என்றால் என்ன?பயன்கள், வகைகள், வரையறைகள், வேறுபாடுகள், நிரல்களின் வெளியீடுகள், பிழைகளை திருத்துதல்’ போன்றவையும் இடம்பெறும். 5 மதிப்பெண் பகுதியில் ஒற்றை முழு விரிவான வினாவாகவோ, ஒன்றுக்கும் மேற்பட்ட சிறு/குறு வினாக்களின் தொகுப்பாகவோ வினாக்கள் அமையலாம்.

முழு மதிப்பெண் பெற

முழு மதிப்பெண் பெற அனைத்து பாடங்களையும் வரிக்கு வரி முழுமையாக புரிந்துகொண்டு படித்தாக வேண்டும். புரிந்து கொண்டவற்றைப் பாடவாரியான குறிப்புகளாகத் தொகுத்து, அவ்வப்போது திருப்புதல் செய்வதும் அவசியம். முழுமையான தேர்வுகளைப் பலமுறை எழுதிப்பார்ப்பது, தவறுகளை அடையாளம் காணவும், தனிப்பட்ட தடுமாற்றங்களை அறிந்துகொள்ளவும் உதவும். இதற்கு அலகுத் தேர்வுகள் மற்றும் மாதிரி தேர்வுகளை சிறந்த வாய்ப்பாகக் கருத வேண்டும்.

ஒரு மதிப்பெண் மற்றும் கட்டாய வினாக்கள், முழு மதிப்பெண் பெறுவதற்கு சவாலாக உள்ளன. எனவே உயர் சிந்தனைமற்றும் மறைமுக வினாக்களுக்குக் கூடுதல் பயிற்சி அவசியம்.

மறைமுக வினாக்கள்

கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் பாடங்களில் பைத்தான் மற்றும் PHP பகுதியில் தொடரியல் (syntax) மற்றும் நிரல்எடுத்துக்காட்டுகள், நிரலின் வெளியீடுகள், நிரலில் உள்ள பிழைகளை சரி செய்தல், பாடப்பகுதி நிரலில்சில மாற்றங்களை செய்து ‘அவற்றின் வெளியீடு என்ன?’ போன்ற வினாக்கள் இடம்பெறலாம். அட்டவணையில் உள்ள தரவுகளுக்கு SQL கட்டளைகள் மற்றும் காட்சி வரைபடம் கேட்கலாம்.

கணினி தொழில்நுட்ப பாடப்பகுதி செய்துபார்க்கக் கூடியதாகஇருப்பதால், அத்தகைய பாடங்களை கணினி உதவியுடன் செய்து பார்ப்பதன் மூலம்புரிதலை எளிதாக்கி, அனைத்துக்கும் விடையளித்து விடலாம். பாடம்தோறும் உள்ள சன்னல் திரைகள், பொத்தான்கள், பணிக்குறிகள், படிநிலைகள், வழிமுறைகள், உரையாடல் பெட்டிகள், குறுக்கு வழி சாவி சேர்மானங்கள் (Short cut keys) ஆகியவற்றை தொகுத்து படிக்கவும்.

மூன்று பாடங்களுக்கும் பொதுவானவை: பாடப்பகுதியின் அனைத்து எடுத்துக்காட்டு களையும் கணினி செய்முறை பயிற்சியாக மேற்கொள்வதன் மூலம், வெளியீடுகள் மற்றும்பிழைகளை கண்டறியும் வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க முடியும். பாடப்பகுதியின் ‘அடைப்புக்குறி தகவல்கள், விரிவாக்கம், மென்பொருள்கள், கண்டுபிடிப்புகள், கண்டறிந்தவர்கள், கண்டறியப்பட்ட ஆண்டுகள், உங்களுக்குத் தெரியுமா, பெட்டி செய்திகள், நினைவில் கொள்க மற்றும் கலைச்சொற்கள்’ ஆகியவற்றில் இருந்தும் வினாக்கள் இடம்பெறும் என்பதால், இவைஅனைத்தையும் தொகுத்துப் படிப்பது அவசியம். பாடப்பகுதியின் ‘உங்களுக்குத் தெரியுமா?’உள்ளிட்ட பெட்டி செய்திகள்,பாடங்களின் பின்னுள்ள ‘நினைவில் கொள்க, கலைச்சொற்கள்’ ஆகியவற்றையும் தொகுத்துப் படிக்க வேண்டும்.

தேர்ச்சி நிச்சயம்

கணினி அறிவியல், கணினிபயன்பாடுகளில் முதல் 6 பாடங்கள், கணினி தொழில்நுட்பத்தின் முதல் 3 பாடங்கள் ஆகியவை தொடர்புடைய மாணவர்களின் தேர்ச்சிக்கு அடிப்படையான பாடங்களாகும். இந்தப் பாடங்கள் தேர்ச்சியை உறுதி செய்வதுடன், கூடுதல் மதிப்பெண்களுக்கும் வாய்ப்பளிக்கும் என்பதால் திருப் புதலில் அதிக கவனம் வேண்டும்.

தேர்வுக்கு குறுகிய காலமே இருப்பதால் அன்றாடம் திருப்புதல் செய்வதுடன், எழுதிப்பார்ப்பதும் நல்லது. 5 மதிப்பெண் வினாக்களில் எதையும் தவிர்க்கக் கூடாது. துணைத் தலைப்புகள், பயன்கள், வகைகள் உள்ளிட்டவற்றின் கீழ் தெரிந்ததை எழுதியும் பகுதியளவு மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். எளிமையான ‘நினைவில் கொள்க, கலைச்சொற்கள், உங்களுக்குத் தெரியுமா?’ பகுதிகளையும் படித்து கணிசமான மதிப்பெண்களை கூடுதலாக பெறலாம்.

‘நிரலின் வெளியீடு, நிரலில்உள்ள பிழைகளை சரி செய்க’என்பதான வினாக்கள் ஒரேவினாத்தாளில் இடம்பெற்றால், ‘நிரலின் வெளியீடு’என்பதில் இருந்தே ‘பிழைகளை கண்டறி’வதற்கான வினாவுக்கும் பதிலைஎடுத்தெழுதி உரிய மதிப்பெண்ணை பெற்றுவிடலாம்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்

வினாத்தாளில் ஆங்கிலவார்த்தைகளும் இடம்பெறவாய்ப்புண்டு. அவை தொடர்பானஐயங்களைத் தவிர்க்க, பாடப்பகுதியின் தலைப்புகளில் அடைப்புக்குறியில் அமைந்த ஆங்கிலவார்த்தைகளையும் நன்றாக படித்திருப்பது உதவும். எ.கா., python operators.

பாடங்களில் இடம்பெறும் ஒரேமாதிரியான வினாக்களை, அவற்றை படிக்கும்போதே அடையாளம் கண்டுகொள்வது தேர்வறை குழப்பங்களைத் தவிர்க்க உதவும். எ.கா., ‘வரையெல்லையை விளக்குக / பைத்தான் வரையெல்லையை விளக்குக’ஆகிய இரண்டும் வெவ்வேறா னவை. மற்றுமொரு வெவ்வேறுவினாவுக்கு எ.கா: ‘செயற்கூறு களின் வகைகள் / செயற்குறிகளை விளக்குக’.

- பாடக்குறிப்புகளை வழங்கியவர்: ஆ.சங்கீதா, கணினி அறிவியல் / கணினி பயன்பாடுகள் / கணினி தொழில்நுட்பம் பாடங்களின் நூலாசிரியர், முதுகலை ஆசிரியர் (கணினிஅறிவியல்), அரசு மேல்நிலைப் பள்ளி இராசந்தாங்கல், திருவண்ணாமலை மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x