Published : 21 Jan 2020 08:33 AM
Last Updated : 21 Jan 2020 08:33 AM

மாணவிகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கும் ‘வளரிளம் பெண்கள் திட்டம்' - கோவை மாவட்டத்தில் 174 அரசு பள்ளிகளில் அறிமுகம்

த.சத்தியசீலன்

பள்ளி மாணவிகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கும் ‘வளரிளம் பெண்கள் திட்டம்' கோவை மாவட்டத்தில் 174 அரசு பள்ளிகளில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 9 முதல் 12-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவிகள் பயன் பெறுவார்கள்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் உள்ள 174 அரசு, நகராட்சி, மாநகராட்சி மற்றும் நலத்துறை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 14 முதல் 18 வயது வரையுள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு, வளரிளம் பெண்கள்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் உடல் நலம், மனநலம், பழகும் தன்மை, தன்சுத்தம், ஆசிரியர்-மாணவிகள் இடையிலான உறவுகள் குறித்து இவ்விருவர் சார்ந்த செயல் திட்டங்கள், பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் கூறும்போது,'வளரிளம் பருவ மாணவிகளை வயதிற்கேற்ப, பண்பாட்டு ரீதியாக மேம்படுத்துவது, அணுகு முறைகளை ஊக்குவிப்பது, வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு நேர்மறையான மற்றும்பொறுப்பான வழிகளில் பதிலளிக்க உதவும் வகையில் திறன்களை வளர்ப்பது போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும். தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்ட வடிவமைப்பின் படி, வளரிளம் பருவ மாணவிகளின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படும். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்” என்றார்.

என்னென்ன பயிற்சிகள் ?

* மாணவிகளுக்கு இடையே நற்பண்புகள், சுயமரியாதை, சுத்தம், சக மாணவிகளுடன் சுமூக உறவு, சக மாணவர்களிடம் ஏற்படும் கவர்ச்சி குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

* உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி திறம்பட நிர்வகிக்கப் பழகுதல், பூப்படைதல் மற்றும் அந்த நாட்களுக்கான விழிப்புணர்வு, அதன்பின்னர் ஏற்படும் சமூக பாகுபாடுகளை விளக்கி அதை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும்.

* பள்ளி மற்றும் வீடுகளில் உள்ளசூழ்நிலைகளுக்கு ஏற்ப நற்பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுப்பதுடன், மாணவிகளின் குறைகளை ஆசிரியர்கள் கேட்டறிய வழிவகை செய்யப்படும்.

* மாணவிகளின் மனநலம் மற்றும்நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துதனிகவனம் செலுத்த வேண்டிய மாணவிகளுக்கு குறிப்பேடு பராமரிக்கப்படும்.

* ஜன. 24-ம் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினம் கொண்டாடும்வகையில், 'பெண்கள் அறிவைவளர்த்தால்' என்ற தலைப்பில் பேச்சு, 'தேக நலனே தேச நலன்' என்றதலைப்பில் கட்டுரை, மகளிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியம் வரைதல் ஆகிய போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு பள்ளிக்கு ரூ.1,539 வழங்கப்படும்.

* மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கபட்ட உளவியல் நிபுணர், பெண்மருத்துவர் ஆகியோரை அழைத்து மனநலம், உடல் நலம் மற்றும் மாதாந்திரப் பிரச்சினைகள் குறித்து விளக்கப்படும்.

மேற்கண்ட பல்வேறு சிறப்புபயிற்சிகள் மாணவிகளுக்கு அளிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x