Published : 20 Jan 2020 12:36 PM
Last Updated : 20 Jan 2020 12:36 PM

இந்திய கிரிக்கெட் வரலாறு: கபில்தேவின் பிசாசுப் படை

பி.எம்.சுதிர்

1975 மற்றும் 1979-ம் ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி களில், மற்ற நாடுகளிடம் மிகவும் மோசமான நிலையில் தோற்றது இந்தியா. இத்தகைய சூழலில் 1983-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கபில்தேவின் தலைமையில், கவாஸ்கரின் வழிகாட்டு தலில், ஸ்ரீகாந்த், மதன்லால், மொகீந்தர் அமர்நாத், ரவி சாஸ்திரி என இளைஞர்களைக் கொண்ட இந்திய அணி அனுப்பப்பட்டது.

இந்த அணி செல்லமாக கபில்தேவின் பிசாசுப் படை (கபில்ஸ் டெவில்ஸ்) என அழைக்கப்பட்டது. கோப்பையை வெல்வோமோ இல்லையோ யாரிடம் அத்தனை எளிதில் வீழ்ந்துவிட மாட்டோம் என்ற உறுதி, இப்போட்டியில் கலந்து கொண்ட அத்தனை வீரர்களின் மனதிலும் இருந்தது.

ஆனால் புதிய அணியின் இந்த மன உறுதியைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் எப்போதும்போல் இந்தியாவை ஒரு புழுவாகவே மற்ற அணிகள் பார்த்தன. இந்த சூழலில், தாங்கள் புழுக்கள் அல்ல என்பதை முதல் போட்டியிலேயே வெளிப்படுத்தியது இந்திய அணி.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 262 ரன்களைச் சேர்த்தது. யஷ்பால் சர்மா 89 ரன்களைச் சேர்க்க மற்ற வீரர்கள் அனைவரும் அவருக்கு துணையாக இருந்து சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தனர்.

60 ஓவர்களில் 263 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆடவந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், ஹெயின்ஸ் என்று பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த இலக்கை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரவி சாஸ்திரி, ரோஜர் பின்னி ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுக்க, 228 ரன்களுக்கே சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி.

முதல் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி அடுத்தடுத்த ஆட்டங்களிலும் தொடர்ந்தது. ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வென்றது இந்தியா. இதைத்தொடர்ந்து ஏற்கெனவே மோதிய அணிகளுடன் இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்றது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் இந்தியா தோற்றது. இதற்கடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது.

இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க, தனியாளாய் போராடிய கேப்டன் கபில் தேவ், 175 ரன்களை விளாசினார். எத்தகைய சூழலில் இருந்தும் தங்களால் மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை கபில்தேவின் இந்த ஆட்டம் இந்திய வீரர்களுக்கு அளித்தது. அந்த நம்பிக்கையுடன் இந்திய அணி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x