Published : 18 Jan 2020 05:57 PM
Last Updated : 18 Jan 2020 05:57 PM

குழந்தைகளுடன் உரையாடுவோம்: 6 - வகுப்பறைக்கு வெளியே..!

''நாம் இன்று வரை குழந்தைகளின் மனத்தில் பலவிதமான அறிவுகளைத் திணிப்பதில்தான் நம்முடைய சக்தியை எல்லாம் பயன்படுத்தி வருகிறோம். அவர்களுடைய மனத்துக்கு உற்சாகம் ஊட்டவோ, மகிழ்ச்சியைப் பெருக்கவோ வேண்டும் என்று நாம் ஒருபொழுதும் நினைத்ததில்லை''- காந்தி ( 'அரிஜன்' -1937)

கல்வியை வெறும் பாடங்களாக மட்டும் வழங்கும் வகுப்பறைகளைக் கடந்து வெளி உலகை அறிமுகம் செய்யும் வகுப்பறைகளே ஒவ்வொரு மாணவரின் மனதிலும் செயல்களிலும் வாழ்க்கை முழுவதும் உடன் பயணிக்கின்றன.

13 வருடங்களுக்கு முன்பு என்னிடம் படித்த கோகுல் கிருஷ்ணன் என்ற மாணவன் இன்று பேசும்போது, ''அப்போ கிளாஸ்ல படிச்ச பாடம் எதுவும் நினைவில் இல்லைங்க மிஸ், போட்டிகளில் கலந்து கொள்ள வெளியூர்களுக்குப் போனதுதாங்க மிஸ்'' இன்னும் நினைவில இருக்கு என்றார்.

ஒரு வினாடி வினா நிகழ்வுக்காக மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அழைத்துச் சென்று அவர்களுடன் ஒரு நம்பிக்கையாக உடனிருந்தது மட்டுமே நான் செய்தது. மற்றபடி ஆர்வமும் திறமையும் அவர்களுடையதே. அதே சமயம் இன்று, "இந்தியா முழுவதும் சுற்றும் ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன், அதை ரசித்துச் செய்யும் மனப்பான்மையை எனக்குப் பள்ளி அனுபவங்களே தந்தன'' எனவும் பகிர்ந்து கொண்டார் அந்த மாணவர்.

"பல மாநிலங்களுக்குச் செல்வதால் பல மொழிகளையும் பேசுகிறேன். இன்று எனது வாழ்க்கையை நம்பிக்கையாக மாற்றியதற்கு அன்று நீங்கள் பள்ளியை விட்டு வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றதுதான் முக்கியமான காரணம்" என்ற வலிமையான கருத்தைப் பதிவு செய்தார் கோகுல்.

வகுப்பறைக்கு வெளியே...
அதே காலகட்டத்தில் ஒரு கட்டுரைப் போட்டிக்காகத் தயார் செய்த மாணவன் விவேகானந்தன் பெருந்துறை அரசுப் பள்ளியிலிருந்து தேர்வாகி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வருகிறான். அங்கு சந்தித்த ஆயிரக்கணக்கான மாணவர்களையும் பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டத்தையும் பார்த்து, "மிஸ் நானும் இதே கல்லூரியில் இன்ஜீனியரிங் படிக்கணும்னு ஆசையா இருக்கு" என்று 2007-ல் தனது விருப்பத்தைப் பதிவு செய்தான்.

மாணவன் விவேகானந்தன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்றாலும், இன்று பொறியியல் பட்டதாரி ஆகிவிட்டார். அந்தக் கனவை விதைத்தது வகுப்பறையைத் தாண்டி வெளியே பெற்ற அனுபவம் என்று நிச்சயமாகக் கூறலாம்.

கோகுல், விவேகானந்தன் போன்ற மாணவர்கள்தான் ஒவ்வொரு வகுப்பறையிலும் அமர்ந்து கல்வி கற்க நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேடல் வெளி உலக அனுபவங்களைத்தான் எப்போதும் விரும்பி ஏற்கிறது. அங்கேதான் அவர்களுக்கான தேடுதல் களமும் விரிவடைகிறது. கனவுகளை விதைக்கும் களங்கள் வகுப்பறைகளைவிட வகுப்பறை தாண்டிய வெளிகளில்தான் எளிமையாகக் கிடைக்கின்றன.

பாரம்பரியக் கலைகளும் அவசியம்

பேச்சு, கட்டுரை, வினாடி வினா, அறிவியல் மாதிரிகள் குறித்த போட்டிகள் மட்டுமல்ல. அந்தந்த நாட்டின் பாரம்பரியக் கலைகளையும் தற்காப்புக் கலைகளையும் கூட மாணவர்களுக்குக் கல்வியுடன் இணைத்துத் தர வேண்டியதுதான் கல்வி முறையின் அவசியமும் தேவையும்.

இவற்றைக் கற்கும் மாணவர்கள் அது குறித்த செயல் அறிவைப் பெறுவதுடன் உடல் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுவதையும் உணர்கின்றனர். உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இணைந்து அறிவு நிலை வளர்ச்சி பெறுவதே கல்வியின் அடிப்படை. இந்தப் படிநிலைகளை சரியான விகிதத்துடன் இக்கலைகளுக்கான பயிற்சி தரும் பள்ளிகள் மிகப் பெரிய அனுபவங்களைத் தனது மாணவர்களுக்கு வழங்குகின்றன எனலாம்.

கல்வியின் நோக்கத்தை ஆழமாக வரையறை செய்தோமானால், ஒரு நாட்டின், ஒரு மொழியின் கலாச்சாரம், பண்பாடு இவற்றையும் பாடப் பொருளாகக் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் வழங்குவதை உணர முடியும். அந்த வகையில் ஒரு குழந்தை பல நாடுகளின் கலாச்சாரத்தை, பண்பாட்டுக் கலைகளைப் பாடப் பொருள்களாக அறிந்து கொள்வதும் சொந்த நாட்டின் பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொள்வதும் மிக அவசியமாகிறது. அப்போதுதான் அந்த நாட்டின் பாரம்பரியம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்.

தன்னம்பிக்கையைக் கூட்டும் பண்பாட்டு விழுமியங்கள்

அறிவுசார் செயல்பாடுகளுடன் இத்தகைய பண்பாட்டு விழுமியங்களைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளின் தன்னம்பிக்கை கூடுகின்றது. பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்கும் மனப்பான்மையும் தானாக வளர்கிறது . அதோடு மற்றவர்களிடமும் பரவலாக்கும் எண்ணம் அவர்களுக்குள் ஆணிவேராக வளர்கிறது. இது போன்ற செயல்களுக்கு உதாரணமாக வாழும் அரசுப் பள்ளி மாணவர்களும் அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களும் தமிழகத்தில் ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றனர் .

கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரம்பரியக் கலைகளையும் பாரம்பரிய விளையாட்டுகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதற்கான தொடர் முயற்சிகளைச் செய்து வரும் தமிழாசிரியர் பாலமுருகன், பறை, கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், கும்மி, காவடியாட்டம் ஆகிய ஏழு வகையான பாரம்பரியக் கலைகளையும் மாணவர்கள் தனது பள்ளியில் இடைவிடாமல் ஏழு வருடங்களாகக் கற்று வருவதைப் பற்றிக் கூறுகிறார்.

அது மட்டுமல்லாமல் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியிலும் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதிலும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் இக்கலைகளை இலவசமாக மேடைகளில் நிகழ்த்தி வருகின்றனர். இதன் மூலம் பாரம்பரியக் கலைகள் பாதுகாக்கப்படுவதோடு மக்களிடம் பரவியும் வருகின்றன. இக்கலைகளில் நன்முறையில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் வானொலி நிகழ்வுகளிலும் இக்கலைகளைப் பற்றி உரை நிகழ்த்தி வருகின்றனர்.

தமிழாசிரியர் நினைத்திருந்தால் வகுப்பறையில் பாரம்பரியக் கலைகள் பற்றி பாடப்பொருளில் மட்டும் கற்பித்து விட்டு, தேர்வுக்கு அவர்களைத் தயார் செய்து விட்டு தன் பணியை நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் பாட நூலில் இடம் பெற்ற பாரம்பரியக் கலைகளை உண்மையாகவே கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாலமுருகன் போன்ற ஆசிரியர்களே பள்ளிகளுக்கு அவசியமாகின்றனர்.

புலன் ஒருங்கிணைப்பில் தற்காப்புக் காலைகள்
அதே போன்று கடலூர் மாவட்டத்தில் வடக்குக் கொளக்குடி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கபிலன் தற்காப்புக் கலைகளை மாணவர்களுக்குக் கற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சிலம்பம், சுருள் கத்தி, நன்சக், தீப்பந்தம் இப்படி நீள்கிறது இவரது பட்டியல். சிறு குழந்தைகளது உடல், மன இயக்கங்களைக் கட்டுப்படுத்தி இப்படியான பயிற்சிகளைத் தரும்போது மாணவர்கள் நல்ல பயிற்சி பெறுகின்றனர். இந்த ஒருங்கிணைப்பு, வகுப்பறைக்குள் பாடங்களைக் கற்றுக் கொள்ள புலன்களை ஒருங்கிணைக்கிறது என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

உண்மையான கற்றல் இங்குதான் நடைபெறுகிறது. இதுபோன்ற கற்பித்தலும் கற்றலும் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டால், வீணான பாடச் சுமைகள் மாணவர் மூளையில் திணிக்கப்படுவது மாறும். இயல்பான, மகிழ்ச்சியான கற்றலுக்குத் துணை வகுக்கும். காந்தியடிகள் கூறியது போன்று, அறிவுத் திணிப்பு இல்லாத இது போன்ற கற்றல் -கற்பித்தல் முறைகள் மாணவர் மனத்திற்கு உற்சாகத்தைத் தருவதுடன் விருப்பத்தையும் சேர்த்தே தருகின்றன.

இவ்வாறு வகுப்பறையைத் தாண்டிய அனுபவங்களாகக் கல்வி மாறும் பொழுது மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். அவர்களது ஆர்வமும் கூடும், இடை நிற்றல் குறையும். இந்த அனுபவங்கள் அவர்களைச் சரியான பாதையில் பயணிக்கத் துணை நிற்கும். கல்வி வளர்ச்சி பெற்றும் சமூக ஒழுங்கு சீர்கெட்ட சமுதாயமாக மாறி வருகிறோம். இன்றைய சூழல் விரும்பத்தகு முறையில் மாற வேண்டுமானால் வகுப்பறைக்கு வெளியேயான அனுபவங்கள், நம் கல்வி முறையில் இடம் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

- தொடர்ந்து பேசுவோம்...

உமா மகேஸ்வரி, ஆசிரியர் - தொடர்புக்கு: uma2015scert@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x