Last Updated : 11 Jan, 2020 07:42 AM

 

Published : 11 Jan 2020 07:42 AM
Last Updated : 11 Jan 2020 07:42 AM

பள்ளி, கல்லூரியில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீட்டில் இனி வேலைவாய்ப்பு வழங்கப்படும்: விதிமுறைகளை திருத்த டிஎன்பிஎஸ்சி முடிவு

சென்னை

பள்ளி, கல்லூரியில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே, 20 சதவீத இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதற்காக விதிமுறைகளைத் திருத்தவும் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்நிலையில் தேர்வுமுறைமற்றும் பாடத் திட்டங்களை மாற்றியமைத்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட பதவிகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழ்வழிஇடஒதுக்கீட்டு நடைமுறையிலும் திருத்தங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள்தான் அதிக அளவில் தமிழ்வழியில் படிக்கின்றனர். ஆனால், தமிழ்வழியில் படித்தவர்
களுக்கு இதர துறைகளில் வேலைவாய்ப்பு குறைவாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக வேலைவாய்ப்பில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறது. இதற்கு தமிழ் வழியில் படித்ததற்கான ‘பிஎஸ்டிஎம்’ சான்றை தேர்வர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த இடஒதுக்கீட்டின்கீழ் பள்ளி, கல்லூரியில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதை முறையாக அமல்படுத்தாத காரணத்தால், தற்போது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை தமிழ்வழியில் முடித்தவர்களும் இடஒதுக்கீட்டில் வேலை பெறக்கூடிய நிலை உள்ளது.

குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஓர் இளநிலை பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக உள்ளது. இந்த வாய்ப்பை பள்ளி, கல்லூரிகளில் ஆங்கில வழியில் படித்தவர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் வரலாறு, பொருளாதாரம் போன்ற படிப்புகளை தொலைநிலை வழியாக தமிழ் வழியில் படித்து பெயரள வுக்கு ஒரு டிகிரியைப் பெற்றுவிடுகின்றனர். அதன்மூலம் ‘பிஎஸ்டிஎம்’ சான்றிதழ் பெற்று தேர்வில் பங்கேற்று தமிழ்வழி இடஒதுக்கீட்டில் வேலைக்கு செல்லும் நிலை தற்போது நிலவுகிறது.

முறையற்ற வகையில் தேர்வு இதனால், தமிழ்வழி இடஒதுக்கீட்டில் செல்பவர்களில் 60 சதவீதம் பேர் முறையற்ற வகையில் தேர்வானவர்களாகவே உள்ளனர். குறிப்பாக ஆங்கில வழியில் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில்படித்தவர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் பலர் இந்த தவறுகளைச் செய்கின்றனர்.

இதனால் தமிழ்வழியில் படித்து உரிய தகுதியுடைய கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்க தமிழ்வழி இடஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி பள்ளி, கல்லூரி என இரண்டிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இனி வேலைவாய்ப்பு வழங்கப்படும். அதற்குரிய ‘பிஎஸ்டிஎம்’ சான்றை தேர்வர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பாணை வெளியாகும். இதன்மூலம் தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x