Last Updated : 09 Jan, 2020 08:30 AM

 

Published : 09 Jan 2020 08:30 AM
Last Updated : 09 Jan 2020 08:30 AM

தேர்வுக்கு தயாரா? - பாடங்களுக்கு அப்பாலும் மாதிரி தேர்வில் பழகுவோம்

திருப்புதல் தேர்வுகள், அலகு தேர்வுகள் என மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் காலம் இது. இந்த மாதிரி தேர்வுகளை வாய்ப்பாக்கி தேர்வுக்கான பாடங்கள் மட்டுமன்றி, தேர்வறைக்கான தனித்துவ தயாரிப்புகளிலும் பழகுவது அவசியம். தேர்வறை பதற்றம் தவிர்க்க பயிற்சி பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பாக, மாதிரித்தேர்வுகள் பலவற்றை எழுதிப் பார்ப்பது சிறப்பான பயிற்சியாக அமையும்.

இத்தேர்வுகள் பாடம் சார்ந்து மாணவர்களின் தயாரிப்பை செம்மைப்படுத்தும். மேலும் தவறுகளை சரி செய்துகொள்ளவும், முறையான எழுத்துப் பயிற்சியாகவும், கூடுதல் மதிப்பெண்களை இலக்காகக் கொண்டு பட்டை தீட்டிக்கொள்ளவும் உதவும்.

இவற்றுடன் தேர்வறைக்கான அனுபவத்தையும் இந்த மாதிரித் தேர்வுகள் வழங்கும். பொதுத்தேர்வு என்பது அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் சீரிய முறையில் அரங்கேறும் தேர்வு முறையாகும். தேர்வறைக்கான இந்த விதிமுறைகளை மாதிரித்தேர்வுகளிலும் பழகுவது நல்லது. தேர்வு நாளன்று
தேர்வுக்கு கிளம்புவதில் தொடங்கி, தேர்வறையில் செயல்படுவது வரை பொதுத் தேர்வினை மனதில் வைத்து மாதிரித் தேர்வுகளை எழுதலாம். இதனால் பொதுத்தேர்வுக்கான தேர்வறை பதற்றத்தை தவிர்க்க முடியும். மாணவரின் கவனம் முழுமைக்கும் தேர்வில் ஒருமுகப்படுத்த இயலும்.

முன்னிரவு உறக்கம் இதர நாட்களைவிட தேர்வுக்கு முந்தைய தினம் போதிய உறக்கம் மேற்கொள்வது அவசியம். இரவில் போதிய உறக்கமும், ஓய்வும், பகலில் மூளையின் ஆற்றலை முழுமையாக பிரயோகிக்க உதவும். உரிய உறக்கமின்றி கண் விழித்துப் படிக்கும் மாணவர்கள், தேர்வறையில் களைப்பாக உணர்வார்கள்.

இதனால் மாணவர்கள் தங்களது முழுத் திறமையை காட்ட வாய்ப்பில்லாது போகலாம். எனவே, தேர்வுக்கு முந்தைய இரவு, குறைந்தபட்ச உறக்கத்தை உறுதி செய்வது அவசியம். இந்த நோக்கத்தில் தற்போதைய மாதிரித் தேர்வுகளின் போதும் தேர்வுக்கு முந்தைய இரவுகளில் போதுமான உறக்கத்தை கடைபிடிக்கப் பழகலாம்.

எழுதுபொருட்களை எடுத்துவைப்பது தேர்வுக்கு கிளம்புவதற்கு சற்று முன்பாக எழுதுபொருட்களை சரிபார்ப்பது தேவையற்ற பதற்றத்தை உண்டுபண்ணும். முந்தைய நாளே, தேர்வுக்கு அவசியமான எழுதுபொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். எழுது பொருட்களை தயார் செய்வதில் அவற்றின் உபயோகத்தை சரிபார்ப்பதும் அடங்கும்.

பேனாவில் மையூற்றுவது, பென்சில் கூர்சீவி வைப்பது, கணித வடிவியல் பெட்டி உபகரணங்களின் செயல்பாடுகளை சரிபார்ப்பது ஆகியவை இவற்றில் அடங்கும். பேனா, பென்சிலைப் பொறுத்தவரை ஒன்றுக்கு மேற்பட்டவற்றை எடுத்துவைப்பது நல்லது. சிலர் பொதுத்தேர்வுக்கு என புதிதாக பேனா வாங்கி உபயோகிப்பார்கள். அவ்வாறெனில் ஒரு வாரமேனும் புதுப் பேனாவில் எழுதிப் பழகியிருப்பது நல்லது. இவ்வாறு எடுத்துவைத்த பிறகு, அடுத்த நாள் காலையில் அனைத்துப் பொருட்களும் கைவசமுள்ளதா என்பதை சரிபார்த்தால் போதும்.

தேர்வு காலை

தேர்வு தினத்தன்று காலையில் எழுந்ததும் கடைசி திருப்புதலுக்கு என முன்கூட்டியே ஒதுக்கி வைத்திருப்பதை மட்டும் படித்தால் போதும். முக்கியமான குறிப்புகள், மனப்பாடப் பகுதி, சூத்திரங்கள், படங்கள் உள்ளிட்டவற்றையும் திருப்புதல் செய்யலாம். காலைக்கடன்களை தவிர்க்காது மேற்கொள்ள வேண்டும்.

உடலை தளர்த்தும் சிறு பயிற்சிகளுக்கு அப்பால் கடின உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். சிலருக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் தேர்வு நாளன்று தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து, எளிதில் செரிக்கக்கூடிய, ஆவியில் வெந்த ஆகாரங்களை உண்பது நல்லது.

கைகளில் இறுக்கமான கயிறுகள் கட்டுவதையும், உள்ளாடை உட்பட இறுக்கமான ஆடைகளையும் தேர்வு தினங்களில் தவிர்க்க வேண்டும். தூய்மையான சீருடை என்பது தன்னம்பிக்கை தரும். வழிபாடு என்ற பெயரில் தேர்வு தினத்தன்று கோவிலுக்கு சென்று கூட்டத்தில் அலைக்கழிவதை தவிர்க்கலாம். வாயிலில் நின்று சேவிப்பதோ, வீட்டில் இரண்டொரு நிமிடங்கள் பிரார்த்தனை செய்வதுடனோ அவற்றை முடித்துக்கொள்ளலாம். தேர்வுகள் முடியும் வரை சற்று முன்னதாகவே பள்ளிக்கு கிளம்புவதும் நல்லது. தேர்வு முடியும் வரை வினாத்தாள் குறித்த வதந்திகளுக்கு காதுகொடுக்காதிருப்பது நல்லது.

தேர்வு மையம் அறிவோம்

தேர்வு மையங்கள் தங்களது பள்ளியிலே செயல்பட்டாலும் தேர்வறை என்பது, மாணவரின் வகுப்பறை அல்லாத வேறொரு அறையாகவே இருக்கும். ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு மையம் என்பது பிறிதொரு பள்ளியாகவும் அமைந்திருக்கலாம்.

அவ்வாறானவர்கள் முந்தைய தினங்களிலே, உரிய ஆசிரியர் அல்லது மேற்பார்வை அலுவலரிடம் அனுமதி பெற்று தேர்வறையின் திசையை அறிந்து வரலாம். தேர்வறையில் தனது இருக்கையின் அமைவிடத்தை தெரிந்து வருவதும் சிறப்பு. வேறொரு பள்ளிக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பின், அங்கு செல்வதற்கான ஒன்றுக்கு மேற்பட்ட வழித்தடங்கள் மற்றும் பயண நேரம் ஆகியவற்றை பெரியவர்கள் உதவியுடன் முன்கூட்டியே
அறிந்து வைத்திருப்பது அவசியம்.

தேர்வறை

தேர்வறைக்குள் நுழையும் முன்னராக, தேர்வறை விதிமுறைகளுக்கு ஏற்ப தன்னை ஓரிரு முறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். காலணி, சாக்ஸ், பெல்ட், எழுதுபொருள் வைப்பதற்கான ’பாக்ஸ்’, தண்ணீர் குடுவை உள்ளிட்டவை குறித்த தேர்வறைக்கான கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

திருப்புதலின் பொருட்டு தயார் செய்த பாடம் தொடர்பான குறிப்புகளோ, வேறு தாள்களோ தன்னிடம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே தேர்வறைக்குள் நுழைய வேண்டும். உள்ளே சென்றதும் எழுதும் மேசை, ஜன்னல் உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வாறு சரி பார்த்துக்கொள்வது அவசியம். தேர்வறைக்கு செல்லும் முன்னர் சிறுநீர் கழித்துவிட்டு செல்வதும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x