Published : 06 Jan 2020 07:29 AM
Last Updated : 06 Jan 2020 07:29 AM

கடல் பாதுகாப்பு குறித்து 3-வது சர்வதேச கருத்தரங்கம் கொச்சியில் நாளை தொடக்கம்

கோப்புப்படம்

கொச்சி

கடல் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து விவாதிக்க, 3-வது சர்வதேச கருத்தரங்கம் நாளை 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்திய கடல் உயிரியல் சங்கம் சார்பாக உலகம் முழுவதும் உள்ள பிரபல கடல் விஞ்ஞானிகள், கடல் ஆய்வாளர்கள், மீன்வள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கடல் உயிரித் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கும் சர்வதேச கருத்தரங்கம் எம்இசிஓஎஸ்-3, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎம்எஃப்ஆர்ஐ) நாளை தொடங்கவுள்ளது.

10-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கும் கருத்தரங்கில் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள சவால்கள், பருவநிலை தாக்கம், அசாதாரண வெப்பமயமாதல், அரபிக் கடலின் மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்படவுள்ளது.

கருத்தரங்கத்தை பின்லாந்து நாட்டின் நீல உயிர் பொருளாதாரம் இயற்கை வள நிறுவனத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் பெட்ரி சூரோனென் தொடங்கி வைக்கிறார். இவர் சமீபத்தில் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்காமல் மீன்பிடி தொழிலை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை உலகளவில் வரவேற்பை பெற்றது.

இந்த கருத்தரங்கத்தில் காலநிலை மாற்றம் குறித்த சிறப்பு அமர்வின் போது, கார்பன் விளைவுகள், கடல் அமில மயமாக்கல், கடல் மேற்பரப்பு வெப்பநிலை, கடல் வெப்பமயமாதல், தீவிர நிகழ்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இதனால், கடலின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

துணை வேந்தருக்கு பரிசு கடல் சந்தையின் நிலையான வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்துப் படவுள்ளது. சிறிய அளவிலான மீன்வளம், மீன்வளர்ப்பில் சமீபத்திய வளர்ச்சி, பசுமை மீன்பிடி தொழில் நுட்பங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில், சென்னை செட்டிநாடு பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் டி.பாலசுப்பிரமணியனுக்கு கடல்சார் பங்களிப்புகளுக்காக டாக்டர் ஜோன்ஸ் நினைவு பரிசு வழங்கப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x