Published : 22 Dec 2019 08:11 AM
Last Updated : 22 Dec 2019 08:11 AM

இரண்டாகப் பிரிக்கப்பட்டால் சிறப்பாக நிர்வகிக்க முடியும்; அண்ணா பல்கலைக்கழக பெயரில் எந்த மாற்றமும் இருக்காது: துணைவேந்தர் சுரப்பா திட்டவட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது வரவேற்கத்தக்கது. அவ்வாறு பிரிக்கப்பட்டாலும் அண்ணா பெயரிலேயே பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் சுரப்பா செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது வரவேற்கத்தக்கது. இதுதொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர், கல்வியாளர்கள் இடம்பெறத் தேவையில்லை. ஆனால், அவர்களது கருத்துகளைக் கேட்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப் பட்டாலும் இப்பல்கலைக்கழகம் அண்ணா பெயரிலேயே தொடர்ந்து செயல்படும். இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யூஜிசி) பல்வேறு தரப்பில் இருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தைப் பிரிப் பதால் கூடுதல் நிதி கிடைக்கும். அதன்மூலம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன், கல்வியின் தரத்தையும் உயர்த்த முடியும். 69 சதவீத இடஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது.

பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும்போது அதன்கீழ் செயல்படும் 500 கல்லூரிகளை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இதை எனது நீண்டகால அனுபவத்தில் கூறுகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு நிர்வாக ரீதியாக மத்திய அரசு பரிந்துரைகள் அளிக்கும். அதன்பிறகு மத்தியஅரசு தலையீடு இல்லாமல், முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே பல்கலைக்கழகம் செயல்படும்.

இவ்வாறு சுரப்பாக தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x