Published : 19 Dec 2019 08:06 AM
Last Updated : 19 Dec 2019 08:06 AM

இந்திய அளவிலான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டியில் சிதம்பரம் பள்ளி மாணவர்கள் பரிந்துரைத்த 2 பொருள் விண்வெளி செல்கிறது

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ள இரு பொருட்களை பரிந்துரை செய்த சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.

கடலூர்

சிதம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பரிந்துரை செய்த 2 பொருட்கள், செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன.

தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் குழு (என்டிஆர்எப்) இந்திய அளவிலான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டியை இணையதளம் வாயிலாக நடத்தியது. இதில் செயற்கைக்கோளுடன் புவியில் இருந்து எடுத்துச் செல்லும் பொருட்களை பரிந்துரைக்க வேண்டும்; அது புதுமையாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும். அந்தப் பொருள் 3.8 செ.மீ அளவிலான பெட்டியில் பொருந்தும் வண்ணம் அமைய வேண்டும் என்ற விதிமுறைகளை விதித்தது.

இதில் சிதம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் பரிந்துரைத்த 9 பொருட்களில் 2 பொருட்கள் தேர்வு செய்யப்பட, அந்த மாணவர் குழுக்கள் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் பள்ளி மாணவர்களின் முதல் குழு சிமென்டை விண்வெளிக்கு அனுப்ப பரிந்துரை செய்தது. அதுகுறித்து அக்குழு தலைவர் 12-ம் வகுப்பு மாணவர் ராகுல் பேசும்போது, "சிமென்டால் ஆன கான்கிரீட் கழிவுகள், பிளாஸ்டிக்போல் மழைநீர் நிலத்துக்குள் செல்வதை தடுக்கிறது. இந்தச் சிமென்டை விண்ணுக்கு அனுப்பி, அங்கு அதற்கு ஏற்படும் மாற்றத்தை ஆராய்வதன் மூலம் இங்குள்ள கான்கிரீட் கழிவுகளை அழிக்கவோ, மறுசுழற்சி செய்வதற்கான வழிகளையோ கூடுதலாக ஆராய முடியும்'' என்றார்.

இந்தக் குழுவில் 12-ம் வகுப்பு மாணவர்கள் வசந்தபிரியன், நவீன்ராஜ், 9-ம் வகுப்பு மாணவர்கள் கீர்த்திவாசன், சூரியா ஆகியோர் உள்ளனர்.

2-வது குழு பென்சிலின் என்ற உயிர் எதிர்ப்பொருளை (ஆன்டிபயாடிக்) அதில் அனுப்ப பரிந்துரைத்திருக்கிறது. இதுகுறித்து இக்குழுவின் தலைவர் 10-ம் வகுப்பு ரகுராம் கூறும்போது, "விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிகள் செய்யும் வீரர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகள் புவியில் இருந்து ராக்கெட் மூலமாக அனுப்பப்படுகின்றன. மாற்றாக இத்தகைய உயிர் எதிர்ப்பொருளை அங்கேயே உருவாக்க முடிந்தால் நேரம் மற்றும் பொருட்செலவு பெருமளவில் குறையும். இதற்கான ஆய்வு மேற்கொள்ள பென்சிலின் நொட்டேட்டம் என்ற பூஞ்சையை விண்ணுக்கு அனுப்புகிறோம்.

வளர்நிலை மாற்றங்கள்

விண்வெளியில் அதனுடைய வளர்நிலை மாற்றங்களை ஆராய இது பயன்படும்'' என்று தெரிவித்தார். இந்தக் குழுவில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்மன்னன், சிவா, 10-ம் வகுப்பு மாணவர் சுதர்சன், 9-ம் வகுப்பு மாணவர் அகமதுகான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த செயல்திட்டத்தில் வழிகாட்டியாக பள்ளியின் கணித ஆசிரியர் வேல்பிரகாஷ் இருந்து வருகிறார். பள்ளியின் செயலாளர் அருள்மொழிச்செல்வன், தலைமை ஆசிரியர் தையல்நாயகி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x