Published : 20 Nov 2019 02:51 PM
Last Updated : 20 Nov 2019 02:51 PM
மாணவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை அருங்காட்சியம் செல்ல அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் தமிழக தொல்லியல் ஆய்வுத் துறைகள் சார்பில் மாமல்லபுரத்தில் உலகப் பாரம்பரிய வார விழா நேற்று (நவம்பர் 19) தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களைக் கண்டுகளிக்க ஒருநாள் மட்டும் இலவச அனுமதி வழங்கப்பட்டது.
உலகப் பாரம்பரிய வார விழாவை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் அருகிலுள்ள ஏதாவது ஓர் அருங்காட்சியகத்துக்குச் சென்று பார்வையிட வேண்டும். இதற்காக ஆண்டுக்கு அரை நாள் செலவு செய்ய வேண்டும். இதுகுறித்து முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மாணவர்களும் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்று தொல்லியல் துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு வடிவம் தந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் அரசாணையாக வெளியிடப்படும்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி மாணவர்களுக்கும் அருங்காட்சியகத்துக்குச் செல்லக்கூடிய ஒரு பாரம்பரியத்தை இந்த வாரத்தில் அறிவித்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்'' என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!