Published : 06 Nov 2019 08:20 AM
Last Updated : 06 Nov 2019 08:20 AM

தனியார் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்களிடமிருந்து அரசு பள்ளி மேம்பாட்டுக்கு நிதி திரட்ட இணையதளம்: முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடமிருந்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஆன்லைனில் நிதி திரட்ட உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை முதல்வர் கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்திய நிறுவனச் சட்டத்தின்படி பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் 2 சதவீத தொகையை, சமூக பொறுப்பு செயல்பாடுகளுக்காக (சிஎஸ்ஆர்) பயன்படுத்த வேண்டும்.

பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளை தேர்வுசெய்து அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி செய்கின்றனர். இத்தகைய நிறுவனங்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உதவும் வகையில், எளிமையான நம்பகமானஇணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. அதேபோல் அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் உள்ளனர்.

அவர்களுக்கென்று எளிய, நம்பகத்தன்மை கொண்ட இணையவழித்தடமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அரசுப் பள்ளிகளுக்கு அவர்கள் செய்த உதவிகளும் இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. அதேபோல் அரசுப் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக உதவும் தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் தகவல் தொகுப்பையும் பெற முடியவில்லை.

இந்த குறைகளை களையும் வகையில், பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு செயல்பாடுகளின் பங்களிப்பையும், தன்னார்வலர்களின் பங்களிப்பையும் பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்தம் வகையில் ஆன்லைனில் நிதி திரட்டும் இணையதளத்தை (https://contribute.tnschools.gov.in) பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியுள்ளது. இப்புதிய இணையதளம் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதால், அதிக எண்ணிகையிலான தன்னார் வலர்களும், நிறுவனங்களும் ஆர்வத்துடன் பங்களிக்க முன்வருவார்கள். வெளிப்படைத்தன்மை காரணமாக அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு பொதுமக்களின் பங்களிப்பும் அதிகரிக்கும்.

இதன்மூலம் 2 சதவீதம் சிஎஸ்ஆர் நிதியை பெறவும் வாய்ப்புகள் ஏற்படும்.

நன்கொடைகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படுவதால் தனிநபர்களும், நிறுவனங்களும் இத்தளத்தின் மூலமாக அதிக அளவில் தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வருவர். மேலும், அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களின் தகவல் தொகுப்பையும் உருவாக்க முடியும். இந்த புதிய இணையதளத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பாடநூல்கழகத் தலைவர் பா.வளர்மதி,தலைமைச் செயலர் கே.சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்.சுடலைக்கண்ணன், கூடுதல் திட்ட இயக்குநர்கள் என்.வெங்கடேஷ், பெ.குப்புசாமி,பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x