Published : 21 Oct 2019 10:26 AM
Last Updated : 21 Oct 2019 10:26 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு 

பி.எம்.சுதிர்

19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்தபெரும் பணக்காரர்களில் ஒருவர் பிரேம்ஜி படேல். விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்ட அவருக்கு, இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற பார்ஸி இளைஞர்களின் கனவுபற்றித் தெரியவந்தது. அவர்களுக்கு உதவ முடிவெடுத்துள்ளார் பிரேம்ஜி படேல். அந்த சமயத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த டி.எச்.படேல் என்பவருக்கு கிரிக்கெட் தொடர்புகள் இருப்பது பிரேம்ஜிக்கு தெரியவந்தது. அவரைத் தொடர்புகொண்ட பிரேம்ஜி படேல், பார்ஸி அணியின் இங்கிலாந்து பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

இந்த 2 பணக்காரர்களின் உதவியால் 1886-ம் ஆண்டு 14 வீரர்களைக் கொண்ட இந்திய பார்ஸி அணி, இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. சுமார் ஒரு ஆண்டுகாலம் இங்கிலாந்தில் தங்கியிருந்து 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பார்ஸி அணி, அதில் 19 போட்டிகளில் தோற்றது.

இது நடந்த சில நாட்களில் தமிழகத்திலும் ஒரு கிரிக்கெட் கிளப்உருவானது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் புச்சிபாபு.
ஆங்கிலேய அரசில் துபாஷியாக (மொழிபெயர்பாளராக) இருந்த மோதரவரப்பு தேரா வெங்கடசாமி என்ற செல்வந்தரின் பேரன்தான் புச்சிபாபு. சென்னையில் தங்கியிருந்த வெங்கடசாமி, சிறுவயதில் புச்சிபாபுவை கவனித்துக்கொள்ள வெள்ளைக்கார பெண் ஒருவரை வேலைக்கு வைத்திருந்தார். தினமும் மாலை வேளைகளில் புச்சிபாபுவுக்கு விளையாட்டு காட்டுவதற்காக அவரை அந்தப் பெண் வெளியில் அழைத்துச் செல்வார். அந்தப்பெண்ணுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பதால் வெள்ளைக்கார இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும் இடத்துக்குத்தான் பெரும்பாலும் புச்சிபாபுவை அழைத்துச் செல்வார். இப்படி சிறுவயதில் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்ததால் புச்சிபாபுவுக்கும் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

1888-ம் ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, ‘மெட்ராஸ் யுனைடட் கிளப்’ (எம்யுசி) என்ற அமைப்பைத் தொடங்கிய புச்சிபாபு, தன் சொந்த பணத்திலேயே அந்த கிரிக்கெட் கிளப்புக்கான மைதானத்தையும் அமைத்துக் கொடுத்தார்.
இப்படி இந்திய இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் விளையாட்டின் ஏபிசிடியை கற்றுக்கொண்டிருக்க, நம் நாட்டு
இளைஞர் ஒருவர் முறையாக சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்துஅணிக்காக ஆடி கலக்கத் தொடங்கினார். அந்த இளைஞரின் பெயர் ரஞ்சித் சிங். உள்ளூர் கிரிக்கெட்டில் இப்போது பிரபலமாக இருக்கும் ‘ரஞ்சி கோப்பை கிரிக்கெட்’ இவரது நினைவாகத்தான் நடத்தப்படுகிறது. இப்படி தன் நினைவாக இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரை நடத்தும் அளவுக்கு அவர் கிரிக்கெட்டில் அப்படி என்னதான் சாதித்தார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x