Published : 21 Oct 2019 10:08 AM
Last Updated : 21 Oct 2019 10:08 AM

தனிமனித வாழ்க்கையை முன்னேற்றும் கல்வியே தேவை: இலங்கை பிரதமர் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க வலியுறுத்தல்

உதகை

தனிமனித வாழ்க்கையை முன்னேற்றும் கல்வியே தற்போதைய தேவை என்று உதகையில் நடைபெற்ற பள்ளி விழாவில் இலங்கை பிரதமரின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

குட்ஷெப்பர்டு பள்ளி விழா

உதகையில் உள்ள குட்ஷெப்பர்டு சர்வதேச பள்ளியில் 43-வது ஆண்டு நிறுவனர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியும், கல்வியாளருமான மைத்திரி விக்கிரமசிங்க கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:

தற்போது சர்வதேசஅளவில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் தொடக்க காலத்தில் குருகுல கல்விமுறை இருந்தது. பின்னர் போர்க்களத்தை எதிர்கொள்ளும் வகையில் ராணுவப் பயிற்சி அடிப்படையிலான கல்வி முறை நடைமுறைக்கு வந்தது.

அதைத்தொடர்ந்து, பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த பிறகே மேற்கத்திய கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. தற்போது, கணினியுடன் தொடர்புடைய கல்வி முறை அமலில் இருந்து வருகிறது.

தற்போதைய கல்விச்சூழலில், தனிமனித வாழ்க்கையை முன்னேற்றத்துக்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காணும் வகையிலான கல்வி முறையே தேவைப்படுகிறது. எனவே, கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்படும் கல்வி
முறைக்கு அடிபணிந்து, நமது பாரம்பரிய கல்வி முறையை விட்டுக் விடக்கூடாது. சரித்திரத்தையும், பூகோளத்தையும் மட்டும் படிப்பதால் சாதித்துவிட முடியாது. அதையும் தாண்டி மதிப்புமிக்க கல்வி முறையே தற்போதைய தேவை. பயங்கரவாதம், இனவாதம், வகுப்புவாதம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணக் கூடிய வகையில் நமது கல்வி முறை அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களின் கலைநிகழ்ச்சி

அதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறுவனர் நாளையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பள்ளி
யின் துணை முதல்வர் எல்சம்மா தாமஸ் மற்றும் ஆசிரியர், ஆசிரியை கள் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x