Published : 21 Oct 2019 08:53 AM
Last Updated : 21 Oct 2019 08:53 AM

வைட்டமின் ‘இ’ சத்து 10 மடங்கு அதிகரிக்கும் வழிமுறைகள்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

புதுடெல்லி

வைட்டமின் ‘இ’ சத்தை 10 மடங்கு கூடுதலாக உற்பத்தி செய்யக்கூடிய வகையில் சூரியகாந்தி செடியின் உயிரணுக்களில் மரபணு மாற்றங்களை செய்திருக்கின்றனர் சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்த ஆய்வறிக்கை ‘பையோகெமிக்கல் இன்ஜினீயரிங்’ ஆய்விதழில் பிரசுரமாகி இருக்கிறது. மனித உடலுக்குள் சுரக்கும் நச்சு வாய்ந்த வேதியியல் பொருட்களினால் உடல் திசுக்கள் பாதிப்படைவதுண்டு. இத்தகைய மோசமான தாக்கத்தில் இருந்து உடலை காப்பாற்றக்கூடிய அம்சம் வைட்டமின் ‘இ’ சத்தில் உள்ள ஆல்பா டக்காஃபராலில் உள்ளதாகவும் இதில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரம் சோதனை கூடத்தில் செயற்கையாக தயாரிக்கப்படும் அல்பா டக்காஃபரால் ஒருபோதும் தாவரத்தில் இருந்து இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்துக்கு ஈடாகாது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

மரபணு ஆராய்ச்சிகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் கடுகு வகையறா செடியான ‘அரபிடாப்சிஸ்’ (Arabidopsis) இந்த ஆய்விலும் பயன்படுத்தப்பட்டது. இந்த செடியில் சூரியகாந்தியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைட்டமின் ‘இ’ சத்து செலுத்
தப்பட்டது. பின்னர் அரபிடாப்சிஸ் செடியின் உயிரணுக்களில் நிகழும் மாற்றங்கள் கணினி மூலமாகக் கணக்கிடப்பட்டன. அதிக அளவிலான ஆல்பா டக்காஃபராலை உற்பத்தி செய்யக்கூடியதாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரணுக்கள் மாற்றப்பட்டன. ஒரு கட்டத்தில் வழக்கத்தை விடவும் 10 மடங்கு கூடுதலாக ஆல்பா டக்காஃபரால் சத்து உற்பத்தியாகத் தொடங்கியது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ கத்தில் விளைந்த சூரியகாந்தி செடிகளின் விதைகள்தான் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவில் பல்கலைக்கழக செடியில் காணப்பட்ட வைட்டமின் ‘இ’சத்துக்களைக் காட்டிலும் 1.3 மடங்குகூடுதலான வைட்டமின் ‘இ’ சத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட விதைகளின் மூலம் கிடைக்கப்பெற்றது.

ஏற்கெனவே, வைட்டமின் ‘இ’ சத்து தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இருந்தாலும் அவை மிகவும் சிக்கல் வாய்ந்ததாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வில் எத்தகைய நொதிகளை (Enzymes) செலுத்தினால் கணிசமான அளவு வைட்டமின் இ சத்தை உறபத்தி செய்ய முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

“கணினி கணக்கிடுதல் முறையைப் பயன்படுத்தி தாவர மரபணுஆராய்ச்சிகளை மேற்கொள்வது முந்தைய ஆராய்ச்சி முறைகளை விடவும் ஆதார வளங்களை, காலத்தை, செலவை மிச்சப்படுத்தக்கூடியதாக உள்ளது” என்று சென்னை ஐஐடியைச் சேர்ந்த இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் கார்த்திக் ராமன் தெரிவித்திருக்கிறார்.

“கணினி முறையும் பொறியியல் கண்ணோட்டமும் கொண்ட ஆராய்ச்சி இது. தாவரங்களில் உள்ள உயிரணுக்களின் உள்கட்டமைப்பை, வலைப்பின்னலை முழுவதுமாக அறிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி முறை துணை புரிகிறது. ஆகையால், உயிரி எரிபொருள் போன்ற மாற்று எரிபொருள் சக்தியை உற்பத்தி செய்ய இந்த புதிய ஆராய்ச்சி வழிவகுக்கும். அது மட்டுமின்றி புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்க்கும் தாவரங்கள் மூலம் எப்படி மருந்து தயாரிக்கலாம் என்பதற்கும் வழிகாட்டும்” என்று சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா தெரிவித்திருக்கிறார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x