Published : 15 Oct 2019 12:44 PM
Last Updated : 15 Oct 2019 12:44 PM

காலநிலை மாற்றமும் குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும்: எச்சரிக்கும் யுனிசெஃப்

பாரிஸ்

காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக யுனிசெஃப் இன்று (அக்.15) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''உலகம் முழுவதும் உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை அல்லது உடல் பருமன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுகாதாரப் பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.

வளர்ச்சிக் குறைபாடு, ஏழை நாடுகளில் 1990 - 2015 காலகட்டத்தில் இருந்ததைக் காட்டிலும் 40% குறைந்துள்ளது. எனினும், 14.9 கோடி குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ற உயரத்தை அடையவில்லை. இது அவர்களின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பாதிப் பேருக்கு போதிய ஊட்டச்சத்து, தாதுப் பொருட்கள் கிடைப்பதில்லை. இது 'மறைக்கப்பட்ட பசி'யாகவே கருதப்படுகிறது. ஏனெனில், அதன் விளைவுகளை குழந்தைகள் வளரும் வரை நீங்கள் கண்டுபிடிக்க மாட்டீர்கள். மற்ற குழந்தைகளைக் காட்டிலும் உங்கள் குழந்தை சற்றே மந்தமாக இருப்பதை, பள்ளியில் தடுமாறுவதை உணரும்போது காலம் கடந்திருக்கும்.

ஊட்டச்சத்து இன்மை கடந்த 30 ஆண்டுகளாக வேறொரு பரிமாணத்தை அடைந்து வருகிறது. அது அதிக எடை அல்லது உடல் பருமனோடு உள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் உயரம் குறைவாக இருக்க வாய்ப்புண்டு.



3 முக்கியப் பிரச்சினைகள்

குழந்தைகளிடத்தில் 3 விதமான ஊட்டச்சத்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முதலாவது ஊட்டச்சத்து பற்றாக்குறை, அடுத்தது போதிய அளவில் முக்கிய நுண் ஊட்டச்சத்துகள் இன்மை, மூன்றாவது உடல் பருமன். இது ஒரே நாட்டில், அண்டை வீடுகளில், ஏன் ஒரே வீட்டில்கூட அடிக்கடி நிகழ்கிறது.

ஊட்டச்சத்து, தாதுச்சத்துகள் இன்மை, நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கிறது. கண்பார்வைக் குறைபாடு, காது கேளாமை ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இரும்புச் சத்துப் பற்றாக்குறை ரத்த சோகையை ஏற்படுத்தக் கூடும். ஐக்யூ அளவைக் குறைக்கும்.

வயது வித்தியாசம் இல்லாமல், உலகம் முழுவதும் 80 கோடி மக்கள் பசியால் அவதிப்படும் வேளையில், 200 கோடி மக்கள் தவறான உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால், உடல் பருமன், இதய நோய், நீரிழிவு ஆகியவை ஏற்படுகின்றன.

குழந்தைகள் போதிய அளவு உண்பது என்பது முக்கியமல்ல. அவர்கள் சரியான உணவைச் சாப்பிடுகிறார்களா என்பதே அவசியம். உடல் பருமன் அதிகம் கொண்ட குழந்தைகள் அவர்களுக்குத் தேவைப்படாத உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தை உட்கொள்கின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும். சர்க்கரை, கொழுப்பு உள்ளிட்ட விவரங்களை அட்டையில் தெளிவாக அச்சிட வேண்டும். தாய்ப்பாலுக்கு மாற்றான பொருட்களின் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் விற்கப்படும் துரித உணவுகளின் விற்பனையையும் விளம்பரங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.

எச்சரிக்கும் காலநிலை மாற்றம்

ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் காலநிலை மாற்றம் முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஒரு டிகிரி வெப்பநிலை உயர்வு கூட 80 சதவீத விவசாயத்தில் விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில் 2100-ம் ஆண்டில் 2 முதல் 3 டிகிரி வெப்பநிலை உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பநிலை உயர்வால், காற்றில் கார்பன் -டை-ஆக்ஸைடின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதனால், உணவுப் பயிர்களில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துகள், துத்தநாகம், இரும்புச்சத்து, விட்டமின் பி உள்ளிட்ட சத்துகள் குறைந்துவிடுகின்றன.

காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். குழந்தைகளை ஊட்டச்சத்துக் குறைபாடுகளோடு வளர்ப்பது, நம் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய கேள்வியை எழுப்பும்''.

இவ்வாறு யுனிசெஃப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎஃப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x