Published : 15 Oct 2019 10:14 AM
Last Updated : 15 Oct 2019 10:14 AM

அன்பான ஆசான் அப்துல் கலாம்!

நேர்மையின் மறுபெயர் கலாம்

டெல்லி ‘ராஷ்டிரபதி பவனில்’ குடியரசுத் தலைவர் குடும்பத்தினரோடு தங்க அனுமதி உண்டு. ஆனாலும், அப்துல் கலாம் தம் சகோதரரையும் அவர் குடும்பத்தினரையும் அழைத்துக் கொள்ளவில்லை. மேலும், தன்னை காண அவர்கள் இங்கு வந்தால், இரவு தங்க வைக்க மாட்டார். டெல்லிக்கு அவர்கள் வந்து போகும் பயணச் செலவை தன் சம்பள பணத்தில் இருந்தே கொடுப்பார்.

இதுகுறித்து கலாமிடம் சிலர் கேட்ட போது, ‘‘நான் திருமணம் ஆகாதவன். எனக்கென்று மனைவி, குழந்தைகள் இல்லை. அப்படி இருக்கும் போது, எனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் இங்கு தங்கவைப்பது முறையாகாது’’ என்று வழக்கமான புன்சிரிப்புடன் பதில் அளித்துள்ளார்.

குடியரசு தலைவராக கலாம் ராஷ்டிரபதி பவனில் இருந்தபோது, அங்கிருக்கும் பணியாளர்களை தனது சொந்த வேலைக்காக பயன்படுத்தியதில்லை. குடியரசுத் தலைவரை கவனிக்கும் பணியாளர்களைவைத்து ராஷ்டிரபதி பவனில் புதிய தோட்டம் (துலிப் மலர்கள்) உருவாக்கினார். ஏராளமான மரக்கன்றுகளை நடவைத்தார். அதேபோல், ராஷ்டிரபதி பவனில் துலிப் மலர் தோட்டங்களை பொதுமக்கள் பார்வையிடவும் வழிவகை செய்தார்.

அத்துடன் ராஷ்டிரபதி பவனுக்குவரும் போது கொண்டுவந்த பொருட்களை மட்டுமே, பதவிக்காலம் முடிந்த பிறகும் எடுத்து சென்றார். வேறு எந்தப் பொருளையும் அவர் எடுத்துச் செல்லவில்லை. எவரும் சாதிக்கலாம் என்று நிரூபித்துக் காட்டியவர் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ பாரத ரத்னா அப்துல் கலாம். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர். இந்தப் பெருமைகளைக் கடந்து ஓர் ஆசானாக மாணவர்களை ஊக்கு விக்கும் கலந்துரையாடல்களில் என்றுமே கலாம் ஈடுபட்டுவந்தார்.

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தன்னை விஞ்ஞானியாக உருவாக்கிய அதே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கவுரவப் பேராசிரியராக பொறுப்பேற்றார். தான் கற்றதை, பெற்றதை இந்திய நாட்டின் கல்வி நிலையங்களுக்கு அள்ளிவழங்குவதோடு நின்று விடவில்லை அவர்.

சோமாலியாவைச் சேர்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் உள்ளிட்ட பல பொறுப்பு களை வகித்தார். அவருடைய 88-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் உலகின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களிடம் முன்மொழிந்த 10 உறுதிமொழி, அவருடைய வெற்றி மொழிகள் மற்றும் ஆற்றிய சில உரைகள்:

கலாமின் வெற்றி மொழி

* நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
* எல்லோருக்கும் சமமான திறமை இல்லை. ஆனால் திறமையை மேம்படுத்திக்கொள்ள எல்லோருக்கும் சமமான வாய்ப்பு உள்ளது.
* உடனடி சந்தோஷத்துக்குப் பின்னால் ஓடாமல் நிலையான சாதனைகள் படைத்திட விடாமுயற்சியோடு செயல்படுங்கள்
* வாழ்க்கையில் பல உயர்வு, தாழ்வுகளைச் சந்தித்தாலும், சிந்தனை என்பதே உங்களுடைய மூலதனச் சொத்து என்பதை மறவாதீர்.
* முழு ஈடுபாடின்றி நீங்கள் வெற்றி பெற முடியாது. முழுவதுமாக ஒப்புக்கொடுக்காமல் நீங்கள் தோல்வி அடையவும் முடியாது
* இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.
* கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
* அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
* அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
* மதிப்பீடுகளுடன் கூடிய கல்வி முறையே இன்றைய தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x