Published : 15 Oct 2019 08:35 AM
Last Updated : 15 Oct 2019 08:35 AM

இன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? ஒரு மாணவியின் எதிர்பார்ப்பு

பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் 17 வயது மாணவி மானசி, வாசிப்பின் மீது பேரார்வம் கொண்டவர். எட்டுவயதில் வாசிக்கத் தொடங்கிய இவர், இலக்கியக் கூட்டங்கள், வாசிப்புப் பட்டறைகள், மொழிபெயர்ப்பு முகாம்கள் என வாசிப்பு சார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்.

இந்த இளம் வயதில் அவரால் ரஷ்ய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஜப்பானிய இலக்கியங்கள் குறித்து தீவிரமாக உரையாட முடியும். அவரது தமிழ் இலக்கிய வாசிப்பும் பரந்து விரிந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் நடந்த ‘படைப்பாளிகளைச் சந்திப்போம்’ நிகழ்வில் அவர் ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி
களை இங்கே தருகிறோம்.

வாசிப்பு தன்னை எப்படிச் செதுக்கியது, தான் விரும்பும் கல்வி எப்படிப்பட்டது, ஆசிரியரிடமிருந்து எதிர்பார்ப்பது என்னென்ன என்று பேசுகிறார் மானசி. "எழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கிய காலம் தொட்டு வாசிப்பின் மீது மிகப் பெரும் ஆர்வம் எனக்குள் இருந்தது. புத்தகங்களுடன் திரிவதைப் பெரிதும் நேசித்தேன். என் வாசிப்புப் பழக்கம்தான் என் விரல் கோத்து, தலைகோதி, வாழ்வின் எல்லாப்பக்கங்களையும் எனக்குப் படிக்கச் சொல்லிக் கொடுத்தது.

மானுட இரைச்சல் சுமந்த நகரக் காற்று நம்முள் மறக்கடித்த பல உணர்வுகளை இலக்கியம் மட்டுமே மீட்டெடுக்க முடியும். நம் கண்கள் வியப்பதற்கு மாறாகப் பல விஷயங்களில் அலட்சியப் பார்வையை மட்டுமே உதறிச்செல்கிறோம். இந்த அலட்சியம் நம் ஆர்வத்தை முழுதாய்க் களவாடிக்கொள்கிறது. ஆர்வம் இல்லையெனில் தேடலும் இல்லை; சிந்தனைகளும் இல்லை. பலதரப்பட்ட விஷயங்களைக் கற்றுக்கொடுத்து, ஒரு தேடலை நோக்கி நம்மை நகர்த்தவே கல்வியும் ஆசிரியர்களும் தேவை.

ஏன் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும்? இன்று பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு? நாம் ஒவ்வொருவரும் கையில் ஏந்தித் திரியும் செல்போன்கள் ஓர் ஆசிரியரைவிட எல்லா விதங்களிலும் அதிக தகவல்களைத் தர முடியும். வாழ்வை, உறவுகளின் சிக்கல்களை, மனித மேன்மைகளை கையாளச் சொல்லித்தருவதும் ஆசிரியரின் பணிதான்.

வெறும் பள்ளிப் பாடங்களை நடத்தி முடிப்பதுடன் ஆசிரியரின் பணி முடிந்துவிடவில்லை; 10-ம் வகுப்பு வரை திருவண்ணாமலையின் முக்கியப் பிரமுகர்களின் குழந்தைகள் படிக்கும் ஒரு ‘ஹைக்ளாஸ் சிபிஎஸ்இ’ பள்ளியில்தான் படித்தேன். 10-ம்வகுப்பு முடித்ததும் அருகேயுள்ள ஓர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தேன். பதினைந்து வருடமாய் வாழ்ந்த அதே ஊரில் இப்படி ஓர் உலகம் இயங்குவதை அதுவரை நான் கவனிக்கவே இல்லை.

காலையில் என் வீட்டில் நாளிதழ் போடும்போது நான் பார்த்துவிடக் கூடாதென வேகவேகமாய் சைக்கிளை ஓட்டிச் செல்லும் என் வகுப்பு நண்பனை, அப்பாவை இழந்து ஜெராக்ஸ் கடையில் மதிய வேலைக்குப் போகும் தோழிகளை, கொண்டுவந்த ஒரே ஒரு டப்பா சாப்பாட்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு துண்டு ஊறுகாயுடனான உணவும், சில நேரங்களில் கெட்டுப்போய் நீர்விட்ட வாடையுடனான அந்தச் சோற்றை எந்தப் புகாருமின்றி சாப்பிடும் நண்பர்களை, ஏதேனும் கல்யாணத்தில் உணவு பரிமாறும் ஒருவனாய் என்னிடமிருந்து மறைந்து நிற்கும் வகுப்புத் தோழனை, அம்மாவுடன் இட்லி கடையில் காலை வேலைகளை முடித்துவிட்டு, பள்ளிக்குத் தாமதமாய் வந்து அடி வாங்குவதை வாடிக்கையாய்க் கொண்டிருந்தவளை, பணம் இல்லாமல் பண்டிகைகளையும் பிறந்த நாட்களையும் எதிர்கொள்ளப் பயப்படும் சக மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது என் புதிய அரசுப் பள்ளி வளாகம்.

பத்தாம் வகுப்பு வரை அதீதப் பராமரிப்புடன் வளர்க்கப்பட்ட நான் சக மாணவர்களை வியப்புடன் கவனித்தேன். இந்த மாற்றம் வாழ்வின் மீதான என் மேலோட்டமான புரிதலைத் துடைத்தெறிந்தது. இந்த அனுபவத்தை நான் வகுப்பறைப் புத்தகங்களிடம் ஒருபோதும் கற்றதில்லை. தன் மர்ம மடிப்புகளுக்குள் வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ள இந்த அனுபவங்களே பாடப் புத்தகங்களை விட எனக்கு முக்கியமானதாய்த் தோன்றுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x