Published : 11 Oct 2019 08:30 AM
Last Updated : 11 Oct 2019 08:30 AM

திறமையான மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘பிரதமரின் புதுமை கற்றல் திட்டம் - துருவ்’: மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி

அபாரத் திறமை கொண்ட மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய சிறப்பு முன்முயற்சியான, பிரதமரின் புதுமைக் கற்றல் திட்டத்தை (துருவ்), மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங், பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் தலைமையகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

மிகச்சிறந்த படைப்பாற்றல், புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவித்து, அவர்களது திறமையை வெளிக்கொணர்வதுடன், மற்ற மாணவர்களின் திறன் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் ‘துருவ்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அறிவியல் மட்டுமன்றி கலை, ஓவியம், எழுத்தாற்றல் உட்பட மாணவர்களுக்கு விருப்பம் உள்ள எந்த துறையிலும் அவர்கள் சாதனை படைக்க இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் திறமைமிக்க மாணவர்கள் தங்களது முழுத் திறமையையும் உணர்ந்து கொள்வதோடு, சமுதாயத்துக்கு பெரும் பயனளிக்கும் விதமாக உரிய பங்களிப்பை வழங்கவும் இது வழிவகுக்கும்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசியதாவது: இந்த திட்டம் பிரதமரின் தொலை நோக்குச் சிந்தனையை வெளிப்படுத்து வதாக அமைந்துள்ளது. அறிவார்ந்த மாணவர்கள் மத்தியில் இதனைத் தொடங்கி வைப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த திட்டம் மாணவர்களுக்கு மட்டுமின்றி, சமுதாயத்
துக்கு திருப்புமுனையாக அமையும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் துருவ் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது, ஒரே பாரதம் வலிமையான பாரதம் என்ற உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். நாட்டில் உள்ள 33 கோடி மாணவர்களின் முகவரியாக இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் திகழ்வார்கள்.
இவ்வாறு அமைச்சர் பொக்ரியால் பேசினார்.

விண்வெளித் துறை செயலாளரும், இஸ்ரோ தலைவருமான கே.சிவன், விங் கமாண்டர் (ஒய்வு) ராகேஷ் சர்மா,
அடல் புதுமை இயக்கத்தின் இயக்குநர் ஆர்.ரமணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 60 திறமையான மாணவர்களுடன் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களும் துருவ் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

பின்னர் இந்த மாணவர்கள், அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கே.சிவன் மற்றும் ராகேஷ் சர்மாவுடன் கலந்துரையாடி, அவர்களது அனுபவம் மற்றும் வாழ்க்கையின் வெற்றி ரகசியங்களை அறிந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x