Published : 09 Oct 2019 03:07 PM
Last Updated : 09 Oct 2019 03:07 PM

கிராமிய மெட்டில் பாடி, ஆடி அசத்தும் ஆசிரியர்:‘ஒன்ஸ்மோர்’ கேட்கும் மாணவர்கள்...

மதுரை

ஆசிரியர்களைக் கண்டால் மாணவர்கள் பயந்த காலம் மாறி, ஆசிரியர் நினைத்தால் மாணவர்களை தன்வசப்படுத்தலாம் என்பதற்கு உதாரணமாக பலர் உள்ளனர். ஒரு கட்டத்தில் பணி மாறிச் செல்லும்போது, கண்ணீர் வடிக்கும் அளவில் பாசம் வளர்க்க முடிகிறது எனில் ஆசிரியர் சமுதாயத்தால் மட்டுமே எனலாம். அந்த வகையில், மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் ஷாஜகான் என்பவர், பள்ளிக்கு வராத மாணவர்களைக்கூட தனது பாடல் வரிகளால் வரவழைக்கிறார்.

இவர், திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணிதப்பாட ஆசிரியராகப் பணிபுரிகிறார். மாணவர்- ஆசிரியர் இடைவெளி என்பது கூடாது என்பதை மனதில் நிறுத்தி, மாணவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை பாடலால் பரவசப்படுத்தி, டான்ஸ் ஆடி பாடமெடுக்கிறார். கல்வியைத் தாண்டி சிந்தனையை உருவாக்கும் விதமாக மாணவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை கற்கச் செய்தால் மேதைகளாகலாம் என நம்புகிறார் ஷாஜகான். ஆசிரியர் பணியை அறப்பணியாக செய்யும் இவர், லட்சிய ஆசிரியர், அப்துல்கலாம் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

அவர் தனது அனுபவங்களை கூறும்போது, ஒவ்வொரு மாணவ, மாணவியிடமும் உள்ள தனிப்பட்ட திறனைக் கண்டுபிடித்து, உற்சாகப்படுத்த வேண்டும். எனக்கு ஒதுக்கியது கணிதப் பாடம். ஒரு கட்டத்தில் பாடம் திகட்டினால் அதை பாடலாக மாற்றுவேன். ‘‘முக்கோணம், முக்கோணம், ஆறுவகை முக்கோணம், பக்கங்கள்மூன்று வகை, கோலங்கள் மூன்று,’’ எனும் வரிகளை மெட்டுப்போட்டு பாடமெடுக்கும்போது, கவனச் சிதறல் இருக்காது. பெரும்பாலும் கிராமிய மெட்டில் பாடியும், ஆடியும் காட்டுவேன்.

இந்த கற்பித்தல் மாணவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்பதால் எனது வகுப்பில் உற்சாகமாக இருப்பர். மேலும் நன்னெறி வகுப்பில் ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குறும்பர், படுகர் கலை ஆட்டம் குறித்த கலையைகற்றுத்தருகிறேன். ஒவ்வொரு மாணவரின் பெயரிலேயே பாடல் பாடுவதால் அவர்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறது.

அவர்களும் உற்சாகமாக என்னைப் பற்றி பாடுங்க சார்.... ஒன்ஸ் மோர் என்று கூட கேட்கிறார்கள். அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவரின் வீட்டுக்கே சென்று, அவரைப் பற்றி பாடல் பாடும்போது, விடுமுறை எடுப்பதில்லை". என்றார்.

- என். சன்னாசி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x