Published : 09 Oct 2019 09:20 AM
Last Updated : 09 Oct 2019 09:20 AM

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் குறித்து ஆய்வு: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 

சுவீடன்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல் உட்பட 6 பிரிவுகளில் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.

டைனமிட்டைக் கண்டுபிடித்தவர் சுவீடன் நாட்டின் ஆல்பிரட் நோபல். இவருடைய அந்தக் கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுத்தியதால் அவர் மிகவும் மனம் வருந்தினார். அதன்பின், மனித குலத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படும் ஆய்வுகளை மேற்கொள்ளும் சிறந்த விஞ்ஞானிகளுக்கு தனது பெயரிலேயே பரிசும் விருதும் ஏற்படுத்தினார்.

அதன்படி கடந்த 1901-ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968-ல் சுவீடன் நடுவண் வங்கியால் ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கம், ஒரு பட்டயம், பரிசுப் பணமும் பெறுவர்.

இந்நிலையில், 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சுவீடனில் உள்ள ஸ்டால்க்கோமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

மருத்துவர்கள் வில்லியம் ஜீ கேலின், சர் பீட்டர் ரேட்கிளிப் , கிரேக் எல் செமன்சா ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மனித உடல் செல்களுக்கும் ஆக்ஸிஜனுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வுக்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை பொறுத்து உடல் செல்கள் எப்படி மாறுகிறது. ஆக்சிஜன் அதிகம் ஆகும் நேரத்தில் என்ன நடக்கும், குறையும் நேரத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து இவர்கள் சோதனை செய்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் என்று கூறுகிறார்கள். உடலுக்கு சிகிச்சையின் போது எவ்வளவு அளிக்க வேண்டும் என்பதை இதில் ஆராய்ந்து உள்ளனர். உடலில் இருக்கும் பல்வேறு திசுக்கள் மற்றும் செல்களில் இந்த சோதனையை செய்து இருக்கிறார்கள். எதிர்காலத்தில் கேன்சர் சிகிச்சைக்கு இந்த ஆராய்ச்சி உதவும் என்று கூறுகிறார்கள். இதனால் தற்போது இவர்கள் மூவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பிரபஞ்சம் தோன்றியது எப்படி, அதில் பூமியின் இடம் என்ன, சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் ரகசியம் குறித்த ஆராய்ச்சி மூலம் தங்கள் பங்களிப்பை வழங்கியதற்காக பாதி பரிசு ஜேம்ஸ் பீபிள்ஸ் என்ற இயற்பியலாளருக்கு அறிவிக்கப்பட்டது.

மீதமுள்ள பாதி, மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குயூலோஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக் ஹோம் நகரில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் மிகப்பெரிய விழாவில், நோபல் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x