Published : 09 Oct 2019 09:20 AM
Last Updated : 09 Oct 2019 09:20 AM

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: 35 ரன்களில் இலங்கை அணி வெற்றி

லாகூர்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர், தற்போது நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் இளம் வீரர்களைக் கொண்டு இந்த தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது கிரிக்கெட் போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. டாஸில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசன் ஷனகா, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து ஆடவந்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை விளாசியது.

இலங்கை அணிக்காக தனது 2-வது டி20 போட்டியில் ஆடிய பனுகா ராஜபக்ச, 48 பந்துகளில் 77 ரன்களைக் குவித்து, தனது அணி இமாலய ஸ்கோரை எட்ட உதவினார். அவரது இந்த ஸ்கோரில் 4 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். ராஜபக்சவுக்கு உதவியாக ஷெகான் ஜெயசூர்யா 34 ரன்களையும், ஷனகா 27 ரன்களையும் எடுத்தனர்.

வெற்றிபெற 183 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த பாகிஸ்தான் அணி, ஆட்டத்தின் ஆரம்பம்
முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியில் இமாத் வாசிம் மட்டும் ஓரளவு நிலைத்து ஆடி 47 ரன்களைச் சேர்த்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 35 ரன்களில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய நுவான் பிரதீப் 4 விக்கெட்களையும், வனிது ஹசரங்கா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி 2-0 என முன்னிலை பெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக பனுகா ராஜபக்சா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x