Published : 08 Oct 2019 05:25 PM
Last Updated : 08 Oct 2019 05:25 PM

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு: இரு நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

சென்னை
வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் மோடி இடையிலான 3 நாட்கள் சந்திப்பு, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

இந்தச் சந்திப்புக்காகத்தான் எப்போதும் இல்லாத வகையில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரம் படுவேகமாகத் தயாராகி வருகிறது. சிலைகளைச் சீரமைத்தல் பணிகள் முதல் வண்ணங்கள் தீட்டுதல், வண்ண விளக்குகளை ஒளிரவிடுதல் வரை தீவிரமாகப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் மற்ற இடங்களில் இல்லாத சிறப்பு, முக்கியத்துவம் மாமல்லபுரத்துக்கு என்ன இருக்கிறது, எதற்காக இந்த இடத்தை இரு தலைவர்கள் சந்திப்புக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி பொதுவாக எழும்.

வரலாற்று ரீதியான தொடர்பு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இருந்ததை உறுதிசெய்யும் விதமாகவே இந்தச் சந்திப்புக்கு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கும், சீனர்களுக்கும் இருந்துள்ளது.

வரலாற்று ரீதியாக புத்த (பவுத்தம்) மதத்துக்கும், இந்த மாமல்லபுரத்துக்கும் இடையே நீண்டகாலத் தொடர்பு இருந்துள்ளது. இதற்கான சான்றுகளை மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் காண முடியும். பவுத்தர்களின் தியான நிலைகளை விளக்கும் சிற்பங்கள், பவுத்தர்கள் போதனைகள், கலைகள் ஆகியவற்றை விவரிக்கும் கலைச்சிற்பங்கள் இங்கு இடம் பெற்றுள்ளதே அதற்கான சான்று.

கி.பி. 527களில் தமிழகத்தில் பல்லவர்கள் ஆண்டபோது, மாமல்லபுரம் (மகாபலிபுரம்) துறைமுக நகரமாக இருந்தது. இங்கிருந்து சீனாவுக்கு கடல் வழியாக வர்த்தகம் நடந்துள்ளது என வரலாறு தெரிவிக்கிறது. குறிப்பாக பல்லவர்கள் சீனாவுடன் கடல் வாணிபத்தை நல்லவிதமாக கைகொண்டிருந்தார்கள்.

பல்லவர்கள் காலத்தில் வாழ்ந்த பவுத்தத் துறவி போதிதர்மன், சீனாவில் முக்கியமான துறவியாக இன்றும் வழிபாட்டுக்கு உரியவராக இருக்கிறார். பல்லவர்களின் மூன்றாவது இளவரசரான போதிதர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து மாமல்லபுரம் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கு புத்த மத்ததைப் பரப்பியவர். இவரின் காலம் கி.பி. 527 என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு சென்றபின் போதிதர்மன் 28-வது பிரஜ்நத்ரா எனும் புத்தத் துறவியாக மாறினார்.

ஆகவே, வரலாற்று ரீதியாகவே தொன்றுதொட்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகம், ஆன்மிகம், கலாச்சாரம் அடிப்படையிலான உறவுகள் இருந்தது உறுதியாகிறது. இதை சீனாவுக்கு வெளிப்படுத்தும் விதமாகவே, சீனாவுடன் நட்பை இறுக்கமாக்கிக் கொள்ளவே ஜி ஜின்பிங்- மோடி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x