Published : 14 Jul 2023 04:12 AM
Last Updated : 14 Jul 2023 04:12 AM

பொது சிவில் சட்டத்தை அம்பேத்கர் ஆதரித்தார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கருத்து

புதுடெல்லி: சட்டமேதை அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தை ஆதரித்தார் என்றுமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சரும், மகாராஷ்டிர தலித் தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.

இதுதொடர்பாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்ய பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. இந்தச் சட்டம் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடிகள் என எவருக்கும் எதிரானது அல்ல.

ஒரே நாடு ஒரே சட்டம்: அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை அம்பேத்கரே பொது சிவில் சட்டத்தை ஆதரித்தார். எனவே, அந்தச் சட்டம் குறித்து அரசியல் செய்வதை விடுத்து, அனைத்துக் கட்சிகளும் அந்தச் சட்டத்தை ஆதரிக்க வேண்டும். ஒரு நாடு என்றால் அங்கு ஒரே விதமான சட்டம் இருக்க வேண்டும். நாட்டின் குடிமக்கள் எல்லாரும் சமம். இதில் யாருக்கும் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஒரு குடிமகனுக்கு ஒருவிதமான சட்டம். இன்னொரு குடிமகனுக்கு வேறு விதமான சட்டம் என்று இருக்கக் கூடாது.

சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்று நமது இந்திய அரசியல் சாசனமே கூறுகிறது. மேலும், நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில்தான் பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசுமுயற்சிக்கிறது.

நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டவும் பொது சிவில் சட்டத்தை எல்லா தரப்பினரும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x