Published : 03 Jul 2023 04:30 AM
Last Updated : 03 Jul 2023 04:30 AM

எண்ணும் எழுத்தும் திட்டம்: மாற்றுத்திறனாளி குழந்தைகள் 51,642 பேருக்கு பயிற்சி புத்தகம்

சென்னை

அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 51 ஆயிரத்து 642 முதல் பருவ பயிற்சி புத்தகம் வழங்குவதற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாநில இயக்குனர் மா.ஆர்த்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கில் தமிழக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு விதமான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தரமான கல்வியை உறுதி செய்வதற்காக 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் அவரவருக்கு ஏற்றவாறு அடிப்படை ஆய்வு கேள்விகள் வடிவமைக்கப்பட்டன. பின்னர், தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் அவர்கள் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு திறன்களைப் பெற்றுள்ளனரா என்பது சிறப்புப் பயிற்றுனர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அரும்பு மொட்டு மலர்

அதில் அவர்கள் அரும்பு (முதல் வகுப்பு), மொட்டு (2-ம் வகுப்பு), மலர் (3-ம் வகுப்பு) ஆகிய நிலைகளில் எந்த நிலையில் உள்ளனர் என்பதுகண்டறியப்பட்டது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அறிவுசார்குறைபாடு மற்றும் பல்வகை குறைபாடுடைய மாணவர்கள் கற்றல் அடைவு நிலையில் பின்தங்கியிருந்ததும், அவர்கள் அரும்பு நிலையிலேயே இருந்ததும் தெரியவந்தது.

அதனடிப்படையில் 2023-2024-ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் (முதல் பருவம் - ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்) பயிற்சி புத்தகம், அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்ஆசிரியர்களும், சிறப்பு பயிற்றுனர்களும் இப்பயிற்சிப் புத்தகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான ஆசிரியர் கையேடும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இப்புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளுக்கும் அவர்களின் தேவை அடிப்படையில் மாணவர்களுக்கான அரும்பு நிலை பயிற்சிப் புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு வழங்கப்படவுள்ளன. அதன்படி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 40 ஆயிரத்து 654 அரும்பு பயிற்சி புத்தகங்களும், 6,898 மொட்டு பயிற்சி புத்தகங்களும், 4,090 மலர் பயிற்சி புத்தகங்களும், ஆசிரியர்களுக்கு 73 ஆயிரத்து 832 ஆசிரியர் கையேடுகளும் வழங்கப்படவுள்ளன.

நிலைக்கு ஏற்ப பயிற்சி

தசை நார் சிதைவு, திசு பன்குறைபாடுடைய மாணவர்கள் அதிக நேரங்களில் சிகிச்சைக்கு செல்லும்காரணத்தால் அவர்கள் பள்ளிக்குவரும் நாட்கள் குறைந்திருக்கும். எனவே, அந்த மாணவர்கள் எளிமையாக பயிற்சிகளை மேற்கொள்ளவும், அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு திறன்களைப் பெறவும் இக்குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவேண்டும். ஒன்றாம் வகுப்பில் பயிலும்அறிவுசார் குறைபாடுள்ள மாணவர்களுக்கு அரும்பு நிலை பயிற்சிப் புத்தகம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களின் நிலைக்கேற்ப பயிற்சிப் புத்தகங்களை வழங்கி, அவர்கள் திரும்ப திரும்ப சில செயல்பாடுகளைச் செய்துஅத்திறன்களைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் விவரங்களை "எமிஸ்" தளத்தில் பதிவு செய்வதை அந்தந்தசிறப்புப் பயிற்றுனர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரை கையாளும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்களுக்கும் தலா ஒரு ஆசிரியர் கையேடு வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x