உள்ளூர் பாடத்திட்டம்: உடனடி தேவை

உள்ளூர் பாடத்திட்டம்: உடனடி தேவை
Updated on
2 min read

தமிழ் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றில், சக ஆசிரியர்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.

1. தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை யார்? அவர் எந்த ஊர்?

2. தமிழில் முதன்முதலாகச் சிறு கதைத் தொகுதி வெளியிட்ட பெண் எழுத்தாளர் யார்? அவர் எந்த ஊர்?

3. புதுக்கவிதை என்ற பெயர் வைத்தவர் யார்? அவர் எந்த ஊர்?

4. தமிழ்ச் சிறுகதையின் திரு மூலர் யார்? எந்த ஊர்?

5. தமிழ்ச் சிறுகதையின் ஆசான் யார்? எந்த ஊர்?

அவர்களிடமிருந்து மௌனமே பதிலாகக் கிடைத்தது. ந.பிச்சமூர்த்தி, கு.ப.சேது அம்மாள், க.நா.சு., மெளனி, கு.ப.ரா. என மேற்கண்ட அனைவருமே கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவேளை கொத்சு, கோயில், கடப்பா, கொழுந்து வெற்றிலை என்று கேட்டிருந்தால், நிச்சயம் அவர்கள் ‘கும்பகோணம்' என்று சொல்லியிருப்பார்கள். ஏனெனில் நடைமுறை வாழ்க்கை பலருக்கு அத்துப்படி. இது எல்லா ஊருக்கும், எல்லா மாவட்டத்துக்கும் பொருந்தும்.

இவை தெரியுமா?

பாட வல்லுநர் குழு, மேலாய்வாளர்கள், பாடநூல் உருவாக்கக் குழு, ஒருங்கிணைப்பாளர் குழு, விரைவுக் குறியீடு மேலாண்மைக் குழு, கலை - வடிவமைப்புக் குழு எனப் பல குழுக்கள் சேர்ந்து பாடங்கள், புத்தகங்களை வடிவமைக்கின்றன. தற்காலப் பாடத்திட்டத்தில் அமைந்திருக்கும் பொருண்மை, அலகு, கற்றல் நோக்கங்கள் யாவும் வியப்பளிக்கின்றன.

மிகவும் கடினமான இப்பணிகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்படும் விதம் பாராட்டுக் குரியது. ஆனால், இவை மட்டும் போதாது. ஏனெனில் 40 ஆண்டுளுக்கு முன்பாகப் படித்த, குற்றாலக் குறவஞ்சி, எல்லோரா, அஜந்தாதான் இப்போதும் பாடமாக இருக்கிறது. குற்றாலக் குறவஞ்சி படித்த நமக்கு, உள்ளூர் குறவஞ்சி எப்போது பாடமாக வரும்? கம்பா நதியின் வருணனையை வாசித்த நாம், எப்போது நொய்யல் ஆறு பற்றி வாசிப்பது? கோபல்ல கிராமம் வாசித்த நாம், எப்போது ஆனைமலை பகுதியை வாசிப்பது? முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் வாசித்த நாம், எப்போது திருஈங்கோய்மலை எழுபது வாசிப்பது?

புதுவையைச் சேர்ந்த பிரபஞ்சனை நமக்குத் தெரிகிறது. நம் ஊரில் இருக்கும் எழுத்தாளர்கள் யார், யார்? குற்றால அருவி நமக்குத் தெரிகிறது. நம் ஊர், மாவட்டத்தில் இருக்கும் அருவிகள் யாவை? கீழடி, கொந்தகை தொல்லியல் கிராமங்கள் நமக்குத் தெரிகின்றன.

நம் மாவட்டத்தில் இருக்கும் அகழாய்வுப் பகுதிகள்தான் என்ன? நடனக் கலைஞர் சந்திரலேகா தெரியும். நம் பகுதியின் செவ்வியல், கிராமிய நடனக் கலைஞர்கள் யார்? ஜல்லிக்கட்டு குறித்த சி.சு.செல்லப்பா நாவல் தெரிகிறது. நம் பகுதி வீரவிளையாட்டுகள் குறித்த நாவல்கள்தான் என்ன? சித்தன்னவாசல் ஓவியங்கள் தெரியும்.

நம் பகுதி ஓவியங்கள் எப்போது தெரியவரும்? விஸ்வநாத் ஆனந்தைத் தெரிந்துகொண் டோம். நம் ஊரில் சிறந்த செஸ் ஆட்டக்காரர் யார்? ஓவியர் ரவி வர்மாவைத் தெரிந்துகொண்டோம். நம் மாவட்டத்தில் உள்ள ஓவியர்கள் யார்? ஷேக்ஸ் பியரை நமக்குத் தெரிகிறது.

எங்கள் மாவட்டத்தில் ஆங்கி லத்தில் எழுதும் ஒருவரின் கவிதையை எப்போது வாசிப்பது? நம் மாவட்டத்தில் இருக் கும் எழுத்தாளர்கள், ஓவி யர்கள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், இயற்கைப் பாதுகாவலர்கள், கிராமியக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், உணவு முறைகள், மலைகள், ஆறுகள், இயற்கை வளங்கள், நாகரிகம், பண்பாட்டு விழாக்களைத் தெரிந்துகொள்வது முக்கியம் இல்லையா?

நுண் பாடம்

இனி நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். 6 - 9 வகுப்பு வரை, எல்லாப் பாடத்துக்கும், தனி இயலாக, அந்தந்த மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் பாடத்தை வடிவமைக்க வேண்டும். உள்ளூர் இலக்கியங்களை, உள்ளூர் வரலாற்றை, உள்ளூர்ப் புவியியலைப் பாடமாகக் கொண்டுவர வேண்டும்.

இவற்றை நுண் பாடமாகக் (micro lessons) கொள்ள வேண்டும். ஒரு பாடம் என்பது, உள்ளூரில் தொடங்கி உலகம்வரை பரவ வேண்டும். நம் பகுதியின் வாழ்வையும் வரலாற்றையும் புவியியலையும் கற்றுத் தராத பாடம், எப்படி மிகச் சிறந்த பாடமாக இருக்க முடியும்? தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் நிச்சயமாக இதனைத் திறம்படச் செய்துகாட்ட முடியும்.

ஏனெனில் ‘புது ஊஞ்சல்’, ‘தேன் சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’ முதலான இதழ்கள், ‘வாசிப்பு இயக்க நூல்கள்’ அனைத்தும் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கப்பட்டவை. இவை அனைத்தும் துணைச் செயல்பாடுகளாகவே அமைந்துள்ளன.

இவற்றில் மிகச் சிறந்த கதை, பாடல், கட்டுரையைப் பாடமாக்கலாம். ஓர் ஆசிரியரின் மிகச் சிறந்த அறிவியல் கட்டுரை, வரலாற்றுக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, ஒரு மொழிபெயர்ப்பு பகுதி ஆகியவற்றைப் பாடமாக்கலாம். ஒரு மாணவர், ஆசிரியர் வரையும் ஓவியத்தை, ஒரு குறிப்பேட்டின் அட்டைப்படம் ஆக்கலாம். உள்ளூர்ப் பாடத்தை, உள்ளூர் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்களைக் கொண்டு எழுத முடியாதா என்ன?

- கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்.

உள்ளூர் பாடத்திட்டம்: உடனடி தேவை
‘அரிவாள் செல்’ எனும் மரபணுப் போர் | நட்சத்திரக் குழந்தைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in