Last Updated : 23 Feb, 2023 06:15 AM

 

Published : 23 Feb 2023 06:15 AM
Last Updated : 23 Feb 2023 06:15 AM

வகுப்பறை அனுபவம்: மாணவர்களின் அன்பு பரிசு

இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளராக பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்ட நிலையில், நேரம் கிடைக்கும்போது எல்லாம் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அன்று ஆசிரியர் தினம், ஒரு ஆசிரியராய் இன்று மாணவர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று பள்ளிக்குச் சென்றிருந்தேன்.

நீண்ட நாள் கழித்து பள்ளிக்குச் சென்றும் தலைமை ஆசிரியரை கூட சந்திக்க விடாமல் அவர்களுடைய அன்பு என்னை வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றது. வகுப்பறைக்குள் நுழைத்த வுடன் ஹேய்! மஞ்சுளா டீச்சர் வந்துட்டாங்க என்ற சத்தம் ஹேப்பி டீச்சர்ஸ் டே மிஸ் என்று ஆரவாரம் என்னை பெருமை கொள்ள வைத்தது.

சற்று நேரத்தில் ஒரு ஐந்து ஆறு மாணவர்கள் பேனாக்களை பரிசாகக் கொண்டு வந்து ஆசிரியர் தின வாழ்த்துகள் என்று என்னிடம் கொடுத்தனர். எனக்கு கிப்ட் எல்லாம் வேண்டாம் என்று மறுத்தேன். அப்போதுதான் மேஜையை கவனித்தபோது கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட பேனாக்களை தங்கள் வகுப்பு ஆசிரியருக்கு கொடுத்திருப்பதை கவனித்தேன்.

"சரி குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் கொடுத்திருக்கும் பேனாக்களை ஆசிரியர் எழுதி முடித்தவுடன் என்ன செய்வார்?" என்று கேட்டேன். "காலியானதும் தூக்கிப்போட்டு விடுவார்" என்று கூறினார்கள். உங்கள் பரிசை ஆசிரியர் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு பரிசை தர வேண்டும். அப்படி ஒரு பரிசை யோசியுங்கள்" என்று கூறினேன்.

சற்று நேரத்தில் ஒரு மாணவி ஒரு ஏ-4 வெள்ளை காகிதத்தை இரண்டாக மடித்து சுற்றிலும் ஸ்கெட்ச்-ஐ கொண்டு அதை டெக்கரேட் செய்து உள்ளே சில பூக்களை வரைந்து ஹேப்பி டீச்சர்ஸ் டே என்று எழுதினாள். ஆம் நான் எதிர்பார்த்தது நடந்து விட்ட மகிழ்ச்சியில் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வெள்ளை காகிதத்தைக் கொடுத்து நீங்கள் உங்களுடைய வகுப்பு ஆசிரியருக்கு என்ன எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை இந்த காகிதத்தில் எழுதுங்கள் என்று கூறினேன்.

பள்ளியில் உள்ள அனைவருக்குமே அவர்கள் ஆசிரியர்களை பற்றி தங்கள் மனதில் உள்ளதை எழுதுவதற்காக வெள்ளை காகிதம் வழங்கப்பட்டது.. உங்களுடைய ஆசிரியரிடம் பிடித்தது பிடிக்காதது நீங்கள் எதிர்பார்ப்பது என எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று கூறினேன். அனைவரும் தங்கள் ஆசிரியரை பற்றி எழுதினர்.

கண்கலங்கினோம்: நான்காம் வகுப்பில் ஒரு மாணவன் டீச்சர் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஆனா உங்களுக்கு தான் என்னை பிடிக்குமா? என்று தெரியவில்லை என்று எழுதியதோடு அதை வாசித்த போது அவனுடைய வகுப்பு ஆசிரியர் மட்டுமின்றி அனைவரும் கண்கலங்கி போனோம். உடனே அவனுடைய வகுப்பு ஆசிரியர் அவனை அன்போடு கட்டித் தழுவினார். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் டா செல்லம் என்று கூறிய போது பள்ளி முழுதுமே கண்ணீரோடு கரவொலியும் கரைந்தது.

இப்படி நிறைய குழந்தைகளின் மன வெளிப்பாடு ஆசிரியர்களை உருக வைத்ததோடு ஆசிரியர்களை யோசிக்க வைத்தது. அவரவர் வகுப்பு குழந்தைகள் வாழ்த்துக்களை எழுதி ஆசிரியர் தின பரிசுகளாக வகுப்பு ஆசிரியரிடம் வழங்கினர்.

ஆச்சரியம் என்னவென்றால் அனைத்து வகுப்புகளிலுமே பல குழந்தைகள் எங்களுக்கு மஞ்சுளா டீச்சரை ரொம்ப பிடிக்கும், நீங்க சீக்கிரம் பள்ளிக்கு வரணும். எங்களோடு விளையாட வரணும்னு எழுதி இருந்தாங்க.

இவ்வாறாக என்னுள்ளும், என் சக ஆசிரிய நண்பர்களிடமும் மற்றும் அன்பு குழந்தைகளிடமும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அன்றைய நிகழ்வு… எனக்கு மறக்க முடியாத ஆசிரியர் தினம்.

- வி.மஞ்சுளா | கட்டுரையாளர்: ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மணலி நியூ டவுன், சென்னை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x