Published : 10 Jan 2023 06:15 AM
Last Updated : 10 Jan 2023 06:15 AM

வங்கிக் கணக்குகளை எளிதாய் அறிவோம்

க. அனுபாமா செந்தில்குமார்

அனைவருக்கும் பிறந்தவுடன் எப்படி பிறப்புச் சான்றிதழ் முக்கியமோ, அதுபோல ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமில்லாமல் நூறு நாள் வேலை செய்பவர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துப் பிரிவினரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். முதலில் சேமிப்பு கணக்கு பற்றி பார்க்கலாம். வங்கிகளில் பல வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன.

என்னென்ன வேண்டும்?

சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு ஒரிஜினல் வேலிட் டாக்குமெண்ட் OVD என்று அழைக்கப்படும் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டை, பெயர் மற்றும் முகவரியுடன்கூடிய தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய 6-ல் இரண்டு கட்டாயம் வேண்டும்.

வங்கியில் பல வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன அவற்றில் மாணவர்களுக்கு என உள்ள வற்றில் சில சிறப்பு கணக்குகளை அறிவோம்.

மாணவர் சேமிப்பு கணக்கு

முதலில் SB STUDENT என்ற சிறப்பு சேமிப்பு கணக்கு பற்றி அறிவோம். இந்த கணக்கை10 வயதை தாண்டிய அனைத்து மாணவர்களும் தொடங்க தகுதியுடையவர்கள் ஆவர். குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக ரூ.500 செலுத்த வேண்டும். இந்த கணக்கு வைத்திருக்கும் மாணவர்களுக்கு

ஏடிஎம் கார்டு, ஃப்ரீ செக் புக், ரூ.1 லட்சத்திற்கான ஃப்ரீ பர்சனல் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் கவரேஜ் என பல வசதிகள் உள்ளன.

மேலும், பள்ளியில் இருந்து வரக்கூடிய கல்வி உதவித் தொகைகள், தன் சொந்த சேமிப்பு தொகையைக்கூட இதில் வரவு வைக்கலாம். ஆனால், அதிகபட்சமாக அவர்களது கணக்கில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

அந்த மாணக்கருக்கு 18 வயது நிரம்பிய உடன் அதிகபட்ச தொகையான ரூ. 50 ஆயிரம் என்பது தளர்த்தப்படும்.

இரண்டாவதாக SB LITTLE STAR என்ற சேமிப்பு கணக்கு பற்றி தெரிந்து கொள்ளலாம். பிறந்து ஒரு நாள் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த கணக்கை தொடங்கி பயன்பெறலாம். காசோலைப் புத்தகம் வேண்டாம் என்றால் குறைந்தபட்ச தொகையாக ரூ. 100 செலுத்த வேண்டும். காசோலைப் புத்தகம் தேவைப்பட்டால் ரூ. 250 செலுத்தி இந்த சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம்.

ரூ.50 ஆயிரம் வரை

அதிகபட்ச தொகையாக ரூ. 50 ஆயிரம் வரை தனியாக வரவு செலவு வைத்துக் கொள்ளலாம். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் அவர்களது பெற்றோர் மூலம் வரவு செலவு வைத்துக் கொள்ளலாம். அதுபோல ஒரு செக்லீப்க்கு அதிகபட்ச தொகை ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.

வங்கிகளுக்கு ஏற்ப திட்டங்கள் மாறுபடும். மேலும் இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்ட வங்கிச் செயல்பாடுகள் இருக்கும். இந்நிலையில், பிற சேமிப்பு கணக்குகள், கடன் உள்ளிட்ட இதர வசதிகள் பற்றி அடுத்து வரும் செய்திகளில் காண்போம். வங்கிக்கு வாருங்கள் மாணவச் செல்வங்களே! வளமாய் சேமியுங்கள்.

கட்டுரையாளர்

உதவி மேலாளர்,

இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி,

கங்கை கொண்ட சோழபுரம்,

அரியலூர் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x