Published : 10 Jan 2023 06:27 AM
Last Updated : 10 Jan 2023 06:27 AM

தேசிய கீதம் பாடும் முன்பே ஆளுநர் எழுந்து சென்றது குற்றம்: அப்பாவு கருத்து

சென்னை: சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடும் வரை இருக்காமல், ஆளுநர் ஆர்.என்.ரவி முன்கூட்டியே எழுந்துசென்று நாட்டை அவமானப்படுத்தியது மாபெரும் குற்றம் என்றுபேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றினார். பின்னர், பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு ஆலோசனை நடத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அப்பாவு கூறியதாவது:

உரை தயாரிக்கப்பட்டு, ஆளுநருக்கு கடந்த 5-ம் தேதி அனுப்பப்பட்டது. அது ஏற்கப்பட்டு 7-ம் தேதி அனுப்பினார். அப்போது மாற்றுக் கருத்து எதையும் கூறாமல், 9-ம் தேதி அதை வாசிப்பதில் பல பகுதிகளை தவிர்த்து, சில பகுதிகளை சேர்த்து பொது மேடைபோல பேசுவது நாகரிகம் அல்ல.அது தவறு. பிரதமர் மோடியின்அரசால் எழுதித் தரப்படும் உரையைத்தான் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஒரு வார்த்தை மாறாமல் வாசிப்பார்.

ஆளுநர் உரை எழுதி ஒப்புதல் பெற்றதை தவிர வேறு எதையும் பிரசுரிக்க கூடாது என்பதால், ஒப்புதல் பெறப்பட்ட முழுமையான உரைஅவைக்குறிப்பில் இடம்பெறும் எனமுதல்வர் தீர்மானம் கொண்டுவந்து, ஒருமனதாக ஏற்கப்பட்டது.

அவைக்கு ஆளுநர் உரையாற்ற வந்தால், முடியும் வரை இருந்து தேசிய கீதம் பாடப்படும்போது, மரியாதை செலுத்திய பிறகு புறப்படுவதுதான் மரபு. அவ்வாறு செய்யாமல், முன்கூட்டியே எழுந்துசென்று நாட்டையே அவமானப்படுத்தியது மிகப் பெரிய குற்றம். சட்டப்பேரவைகளில் ஆளுநர் உரையாற்ற அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 175, 176-ன்படிதான் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே அவர் உச்சரிக்காதது வேதனை.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இடைஞ்சல் செய்து வந்த ஆளுநர் தன்கர், தற்போது குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார். அதுபோல, தமிழக ஆளுநருக்கும் நோக்கம் இருக்கிறதா என தெரியவில்லை. ஆளுநரை திரும்ப பெறுமாறு தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று கேட்கிறீர்கள். பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் குறித்து அவை முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஜன. 13-ம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர்

ஜன.10-ம் தேதி (இன்று) சட்டப்பேரவை கூடியதும், சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பேரவை தள்ளிவைக்கப்படும். பிறகு, ஜன.11, 12 ஆகிய 2 நாட்களும் பேரவை முழுமையாக நடைபெறும். 13-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் உரையுடன் பேரவைக் கூட்டம் நிறைவடையும். பேரவை அலுவலில் கேள்வி நேரம் இடம்பெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x