Published : 03 Nov 2021 03:07 AM
Last Updated : 03 Nov 2021 03:07 AM

நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 8.70 லட்சம் பேர் தேர்ச்சி; தேசிய அளவில் 23-வது இடம்பிடித்து நாமக்கல் மாணவி சாதனை: தமிழகத்தில் 3 பேர் 720-க்கு 710 மதிப்பெண் பெற்றனர்

சென்னை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 8.70 லட்சம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 23-வது இடம்பிடித்து நாமக்கல்மாணவி சாதனை படைத்துள்ளார். இவர் உட்பட 3 தமிழக மாணவர்கள் 720-க்கு 710 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

2021-22 கல்வி ஆண்டு இள நிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த செப்.12-ம் தேதி நடந்தது. 15 லட்சத்து 44,275 பேர் தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுஎழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. நாடு முழுவதும் இந்தஆண்டில் 4 லட்சத்து 94,806 மாணவிகள், 3 லட்சத்து 75,260 மாணவர்கள், 8 திருநங்கைகள் என மொத்தம்8 லட்சத்து 70,074 பேர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில் ஓபிசி - 3 லட்சத்து 96,772, எஸ்சி - 1 லட்சத்து 14,221, எஸ்டி - 40,193, பொதுப் பிரிவு - 2 லட்சத்து 39,789, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (இடபிள்யூஎஸ்) - 79,099பேர் இடம்பிடித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 2,683 பேர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 98,574 பேர் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலங்கானா மாணவர் மிரிணாள் குட்டேரி, டெல்லி மாணவர்தன்மய் குப்தா, மகாராஷ்டிர மாணவி கார்த்திகா ஜி.நாயர் ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாணவர் அமன்குமார் திரிபாதி 716 மதிப்பெண்கள் பெற்று 4-வது இடத்தில் உள்ளார். அடுத்தஇடங்களில் 15 மாணவர்களும், ஒரு மாணவியும் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் 20 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை, நாமக்கல் மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 23-வது இடத்தில் உள்ளார். நாமக்கல் மாணவர் எம்.பிரவீன் 710 மதிப்பெண்ணுடன் தமிழகத்தில் 2-வது இடத்தையும் (அகில இந்திய அளவில் 30-வது இடம்), தஞ்சாவூர் மாணவர் ஆர்.அரவிந்த் 710 மதிப்பெண்ணுடன் 3-வது இடத்தையும் (அகில இந்தியஅளவில் 43-வது இடம்) பிடித்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நீட் தேர்வைமுதல்முறையாக எழுதியவர்கள். இதில், கீதாஞ்சலி, பிரவீன் ஆகியோர் நீட் தேர்வுக்காக நாமக்கல் கிரீன் பார்க் பயிற்சி மையத்தில் படித்துள்ளனர். இதே மையத்தில் படித்த அர்ச்சிதா என்ற மாணவி 705 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 3-வது இடம் பிடித்துள்ள தஞ்சாவூர் மாணவர் ஆர்.அரவிந்த் எந்த பயிற்சி மையத்திலும் படிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் தகுதிபெற்ற 8 லட்சத்து 70,074 பேருக்கான கட்-ஆஃப்மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப் பிரிவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய (இடபிள்யூஎஸ்) பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 720 முதல் 138 வரையிலான மதிப்பெண்களில் (50 பர்சன்டைல்) 7 லட்சத்து 70,857 பேரும், ஓபிசி பிரிவில் 137 முதல் 108 வரையிலான மதிப்பெண்களில் (40 பர்சன்டைல்) 66,978 பேரும், எஸ்சி பிரிவில்137 முதல் 108 மதிப்பெண்களில் (40 பர்சன்டைல்) 22,384 பேரும், எஸ்டி பிரிவில் 137 முதல் 108 மதிப்பெண்களில் (40 பர்சன்டைல்) 9,312 பேரும் இடம்பிடித்துள்ளனர்.

பொதுப் பிரிவு மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 137 முதல் 122 வரையிலான மதிப்பெண்களில் (45 பர்சன்டைல்) 313 பேரும், ஓபிசி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 121 முதல் 108 மதிப்பெண்களில் (40 பர்சன்டைல்) 157 பேரும், எஸ்சி மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 121 முதல் 108 வரையிலான மதிப்பெண்களில் (40 பர்சன்டைல்) 59 பேரும், எஸ்டி மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 121 முதல் 108 வரையிலான மதிப்பெண்களில் (40 பர்சன்டைல்) 14 பேரும் இடம்பிடித்துள்ளனர். நீட் தேர்வில் மாணவர்கள் முழு மதிப்பெண் (720-க்கு 720) எடுத்ததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x