Last Updated : 01 Sep, 2020 05:18 PM

 

Published : 01 Sep 2020 05:18 PM
Last Updated : 01 Sep 2020 05:18 PM

கடும் மழை; குறைவான போக்குவரத்து வசதி: மேற்குவங்க ஜேஇஇ தேர்வர்கள் அவதி

கடுமையான மழை மற்றும் குறைவான போக்குவரத்து வசதியால் மேற்குவங்க ஜேஇஇ தேர்வர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

நாடு முழுவதும் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிஹார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோதும் திட்டமிட்டபடி தேர்வுகள் இன்று தொடங்கின.

தேர்வர்களுக்காக ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இலவசப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்வெழுத மையங்களுக்குச் சென்ற ஜேஇஇ தேர்வர்கள் கடுமையான மழை மற்றும் குறைவான போக்குவரத்து வசதியால் சிரமப்பட்டனர். அம்மாநில அரசு அதிகாலை 5 மணியில் இருந்தே பேருந்து சேவைகளைத் தொடங்கி இருந்தது.

எனினும் வடக்கு 24 பர்கானாஸ், பெர்ஹாம்பூர், மால்டா மற்றும் சிலிகுரி பகுதியைச் சேர்ந்த தேர்வர்கள் பேருந்து கிடைப்பதில் சிரமங்களை எதிர்கொண்டனர். உள்ளூர் ரயில் போக்குவரத்துச் சேவை இல்லாதது அவர்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்துத் தேர்வர்களில் ஒருவரான சுபம் தாஸ் கூறும்போது, ''டிசிஎஸ் கிட்டோபிடான் பகுதியில் உள்ள தேர்வு மையத்துக்குச் செல்ல வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் இருந்து நேரடிப் பேருந்து வசதியில்லை. இதனால் டாக்ஸியை வாடகைக்கு எடுக்க வேண்டி இருந்தது. ரயில் சேவை இருந்தால் எளிதாக இருந்திருக்கும்'' என்றார்.

முன்னதாக, பெருந்தொற்றுக் காலத்தில் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு வாதிட்டது. எனினும் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி நேற்று (திங்கட்கிழமை) கூறும்போது, ''தேர்வுகளை நடத்துமாறு மத்திய அரசு, தேசியத் தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. இனி இதுகுறித்துப் பேச எதுவுமில்லை'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x