Published : 01 Sep 2020 03:35 PM
Last Updated : 01 Sep 2020 03:35 PM

தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கூடாது: அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கோரிக்கை

சென்னை

தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை டிசி இல்லாவிட்டால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குத் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''கரோனா நோய்த்தொற்று காலத்தில் மார்ச் 17-ம் தேதி முதல் இந்த நிமிடம் வரை பள்ளிகள் திறக்கவில்லை. ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்தி வருகின்றோம். எண்ணற்ற இடர்ப்பாடுகளுக்கிடையில் பழைய, புதிய கல்விக் கட்டணத்தை வசூலிக்க முடியாமல் தத்தளித்து வருகிறோம். இந்தச் சூழலில் தனியார் பள்ளியில் படித்து, பழைய, புதிய நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தைக் கட்டாமலேயே டி.சி. கூட வாங்காமல் ஆதார் அட்டையை மட்டுமே வைத்துக்கொண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கின்றனர். இதனால் பல தனியார் பள்ளிகள் இன்றைக்கு மூடும் நிலைக்கு வந்துள்ளன.

இதனால் தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டி இந்தக் கோரிக்கை மனுவினைச் சமர்ப்பிக்கின்றோம்.

கோரிக்கைகள்

* தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் எந்தப் பள்ளியிலும் எந்த மாணவரையும் சேர்க்கக்கூடாது என்ற அரசாணையை உடனே வெளியிட்டு, கட்டாயம் அதை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும்.

* அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டப்படி 2018 -19 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டண பாக்கி நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 40% நிலுவை உள்ளதையும் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான 100 சதவீதக் கல்விக் கட்டண பாக்கியை அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் உடனே வழங்க வேண்டும்.

* கரோனா நோய்த் தொற்று காலத்தில் தீயணைப்பு துறை தடையின்மைச் சான்று, சுகாதாரத்துறை சுகாதாரச் சான்று, கட்டிட உறுதிச் சான்று, கட்டிட உரிமைச் சான்று பெறுவதற்குப் பல்லாயிரக்கணக்கில் செலவழித்தாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். தமிழக அரசின் ஆணைப்படி அனைவருக்கும் உடனடித் தொடர் அங்கீகாரத்தை எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடியாக வழங்கிட வேண்டும்.

* பல்வேறு கால தாமதங்கள், சிரமங்கள், அலைக்கழிப்புகள், கையூட்டுகள் எனப் பள்ளி நிர்வாகிகளுக்கு மிகுந்த அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படுவதால் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ள அதிகபட்ச அதிகாரமான தனியார் பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகாரம் வழங்கும் அரசாணை எண் 101-ஐ ரத்து செய்து பழையபடி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரே தொடர் அங்கீகாரத்தை வழங்கிட ஆவன செய்ய வேண்டும்.

* கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கீகார ஆணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டும் அங்கீகார ஆணையை அமைச்சரே எல்லாப் பள்ளிகளுக்கும் நேரடியாக வழங்கும்படி செய்ய வேண்டும்.

* நோய்த்தொற்று காலத்திலாவது தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான தமிழக அரசின் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும்.

* சுயநிதிப் பள்ளிகளுக்கான தனி இயக்குனரகத்தை உடனே ஏற்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிப் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அலுவலகம் முன்பு செப். 21-ம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x