Published : 04 Mar 2020 05:08 PM
Last Updated : 04 Mar 2020 05:08 PM

நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, இயங்கும் மதரஸாக்களின் எண்ணிக்கை 19,132: மத்திய அமைச்சர் தகவல்

நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, இயங்கும் மதரஸாக்களின் எண்ணிக்கை 19,132 ஆக உள்ளது என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பேசிய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ''நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களின் எண்ணிக்கை 19,132 ஆக உள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 11,621 மதரஸாக்கள் செயல்படுகின்றன.

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், மதரஸாக்கள் மாநிலப் பாடத் திட்டத்தையோ, என்சிஇஆர்டி பாடத் திட்டத்தையோ பின்பற்றிக் கொள்ளலாம். பாடப் புத்தகங்களிலும் இரண்டில் ஒன்றைப் பின்பற்றலாம்.

பொதுமக்களின் நன்கொடையோடு இயங்கி வரும் மதரஸா தார்ஸ் நிசாமி, குறிப்பிட்ட எந்தவொரு பாடத் திட்டத்தையோ, புத்தகங்களையோ பின்பற்ற வேண்டியதில்லை.

பொதுவாக மதரஸாக்கள் மாநிலப் பாடத் திட்ட, புத்தகங்களையே பின்பற்றுகின்றன. சில மாநிலங்கள் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. எதில் விருப்பமோ, அதை மதரஸாக்கள் பின்பற்றலாம்.

சிபிஎஸ்இ மற்றும் என்ஐஓஎஸ் ஆகியவை என்சிஇஆர்டி பாடத் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. வெவ்வேறு முறைமைகளில் 28 மாநிலங்கள் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தின் கீழ் வருகின்றன.

அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகா, மிசோரம், மணிப்பூர், லட்சத்தீவு, புதுச்சேரி, அந்தமான், நிகோபர் தீவுகள், குஜராத், டையு & டாமன், தாத்ரா ஹவேலி, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் கேரளா, பிஹார், டெல்லி, ஹரியாணா, திரிபுரா, கோவா, ராஜஸ்தான் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள்/ யூனியங்கள் பிரதேசங்களே அவை.

அதேபோல நாடு முழுவதும் 4,878 அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் இயங்கி வருகின்றன'' என்று அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x