Published : 04 Mar 2020 11:55 AM
Last Updated : 04 Mar 2020 11:55 AM

அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை பஞ்சாபி கட்டாயம்:  பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்

அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை பஞ்சாபி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கான மசோதா, பஞ்சாப் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேறியது. பட்ஜெட் உரையின்போது கல்வி அமைச்சர் சரன்ஜித் சிங், இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், ''யூஎன்ஓ அறிக்கைப்படி, பழமை வாய்ந்த 2 ஆயிரம் மொழிகளில் ஒன்றான பஞ்சாபி, அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பஞ்சாபி மொழி தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் கட்டாயம் மேற்கொள்ளப்படும். அண்டை மாநிலங்களான ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகரிலும் பஞ்சாபி மொழிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

சண்டிகரில் பஞ்சாபியை முதல் மொழியாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். பஞ்சாப் மாநிலம் முழுவதும் பஞ்சாபி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும்.

மாணவர்கள் தங்களுக்குள்ளே பஞ்சாபியில் பேசினால் சில பள்ளிகள் அபராதம் விதிக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

விவாதத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் குல்தார் சிங் சந்த்வான், ''அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களும் பஞ்சாப் மொழியில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். ஆளுநர் மற்றும் முதல்வர் உரைகள் பஞ்சாபி மொழியிலும் இருத்தல் வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

அண்மையில் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரையிலும் மராத்தி மொழியைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x